சென்னை, நவ.13: சென்னையில் அதிகரிக்கும் வழிப்பறித் திருட்டைத் தடுக்கும் வகையில் போலீஸாருக்கு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 40 உதவி ஆணையர்கள் தலைமையில் 80 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் அண்மைக்காலமாக வழிப்பறி, திருட்டு, வீட்டை உடைத்து திருட்டு ஆகியவை அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
திருட்டுகளைத் தடுக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை புதிய ஆணையர் ஜே.கே.திரிபாதி, பீட் ஆபீஸர் திட்டம், தீவிர ரோந்து,பாய்ஸ் கிளப் ஆகியவற்றுக்கு வலுவூட்டியுள்ளார்.
தனியாக சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்து பறிப்பது, வீட்டில் தனியாக பெண்களிடம் கத்திமுனையில் தங்கநகை மற்றும் பொருள்களை பறித்துச் செல்வது, ஆளில்லாத வீடுகளில் கொள்ளையடிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
இதில் வழிப்பறியும்,திருட்டும் தினமும் நடைபெற்று வருகின்றன. தங்கத்தின் விலை உயர்வு, மாறி வரும் வாழ்க்கை முறை ஆகியவை பிரதான காரணங்களாக கூறப்படுகின்றன.
மேலும் இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் பணத்துக்காக ஈடுபடுவது அதிகரித்து வருவதால் புலனாய்வு செய்து, கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இப்போது இவற்றை கட்டுப்படுத்துவதிலும், அதில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறையினர் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் உள்ள 9 காவல் மாவட்டங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் மண்டல வாரியாக நடைபெற்றது.
இதில் வழிப்பறி, திருட்டு, வீடு புகுந்து திருட்டு ஆகியவற்றில் ஈடுபடுவோரை கைது செய்யும் வகையில் மண்டலம் வாரியாக தனிப்படைகள் அமைக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக 40 உதவி ஆணையர்கள் தலைமையில் 80 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பரிசுத் திட்டம்: தனிப்படையினரை ஊக்கப்படுத்தும் வகையிலும்,குற்றவாளிகளை விரைவில் கைது செய்து இந்த குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும், சிறப்பாக செயல்படும் முதல் 3 தனிப்படைகளுக்கு பரிசு வழங்கப்படும். இந்த பரிசு பெருநகர காவல்துறை அளவில் முதல் 3 இடங்களைக் பிடிக்கும் தனிப்படைகளுக்கு வழங்கப்படும் என்றும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திருட்டு வழப்பறி வழக்குகளில் சிறப்பாக துப்புதுலக்கும் போலீஸாருக்கு அவ்வபோது வெகுமதி வழங்கப்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறான இந்த பரிசு அறிவிப்பு, காவலர்களிடமும், கீழ் நிலை அதிகாரிகளிடமும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி, அவர்களை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வழிப்பறி,திருட்டு ,வீடு புகுந்து திருட்டு ஆகியவற்றில் ஈடுபடுவோரை பெருமளவு கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.