போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராணுவத்தில் சேரும் முன்பே இத்தனை சவால்களா?

சென்னை, நவ. 16: ராணுவப் பணியில் சேருவதற்கு முன்னரே கடும் சவால்களைச் சந்திக்கின்றனர் தமிழக இளைஞர்கள். ராணுவத்தில் சிப்பாய் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், சிப்பாய் கிளர்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள்களைத்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:28 pm

சென்னை, நவ. 16: ராணுவப் பணியில் சேருவதற்கு முன்னரே கடும் சவால்களைச் சந்திக்கின்றனர் தமிழக இளைஞர்கள்.

ராணுவத்தில் சிப்பாய் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், சிப்பாய் கிளர்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்யும் சிறப்பு முகாம் சென்னை ஆவடியில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 15-ம் தேதி தொடங்கிய இந்த முகாம், வரும் 20-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

சிப்பாய் டெக்னிக்கல் பணிக்கு, திருவள்ளூர், வேலூர், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆள்தேர்வு சிறப்பு முகாமுக்கு வந்த இளைஞர்களிடம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. இப் பணி முடிந்ததும், உடற்திறன் தேர்வு புதன்கிழமை காலை 5.30 மணிக்குத் தொடங்கும் எனக்கூறி, அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டனர்.

இரு நாள்கள் நடைபெறும் தேர்வால், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்ததும், இதில் பங்கேற்ற அனைவராலும் ஊருக்குத் திரும்ப முடியவில்லை. இவர்களில் பெரும்பாலானோர், வாடகைக்கு அறை எடுத்துத் தங்க வசதியின்றி, தேர்வு நடைபெறும் விளையாட்டுத் திடலுக்கு வெளியே, சாலையோரம் படுத்துறங்கினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தரையில் காகிதத்தை விரித்து, அதில் படுத்துறங்கினர்.

சிப்பாய் வர்த்தகப் பிரிவு தேர்வுக்கு புதன்கிழமை காலை வந்திருந்த இளைஞர்களுக்கும் இதே நிலையே ஏற்பட்டது.

திருவள்ளூர், வேலூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டத்து இளைஞர்கள் இதற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான உடற்திறன் தேர்வுகள் வியாழக்கிழமை நடைபெறும் என்பதால், இவர்களும் ஆவடி மைதானத்துக்கு வெளியே புதன்கிழமை இரவு தங்கினர். இதனால், குளிப்பதற்கும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் கூட வழியின்றி அவதிப்பட்டனர்.

இதில் பங்கேற்ற இளைஞர்கள் கூறியது: ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும்போதெல்லாம் இவ்வாறான பிரச்னைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. 4 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றாக அழைத்தால், அதற்கேற்ப தேர்வாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அல்லது மாவட்டங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

ஆனால், இதை சரி செய்ய ராணுவத்தின் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்வுக்கு வரும் இளைஞர்களைத் தங்க வைக்கப் போதிய இடவசதியை ராணுவம் அளிக்க முடியாது எனும் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், தேர்வை ஒரே நாளில் நடத்தி முடித்தால் எங்களுக்கு சிரமம் இருக்காது என்கின்றனர் இளைஞர்கள்.

ராணுவத் தரப்பு பதில்...: ஏராளமான இளைஞர்கள் வருவதாலும், தேர்வாளர்கள் குறைவாக இருப்பதாலும், தேர்வுப் பணியில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கவுமே, தேர்வு நடைமுறைகள் இரு நாள்களுக்கு நீடிக்கின்றன என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல, அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதாலேயே, ஒரு முறைக்கு 4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் நடைபெறும் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வு முகாமுக்கு, இளைஞர்கள் முன்கூட்டியே சென்று இடம் பிடிப்பதும், தள்ளு முள்ளு ஏற்படுவதும், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும் வழக்கமாக உள்ளது.

ராணுவத்தில் சேர்வது எளிது என்பதால், இதற்கான தேர்வில் பங்கேற்க இளைஞர்களிடையே ஆர்வம் அதிகம் காணப்படுகிறது.

அடிப்படை வசதிகளைச் செய்ய முடியாவிட்டாலும், ராணுவம் நினைத்தால் சிரமங்களைக் குறைக்க முடியும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.