ஹால்மார்க் தங்கமானாலும் சோதிச்சு பாருங்க...

சென்னை, மே 6: ஹால்மார்க் தங்கம் வாங்கினாலும் அதைச் சோதித்து பார்த்து வாங்குவதுதான் நமது பணத்துக்குப் பாதுகாப்பு. ராக்கெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அ

சென்னை, மே 6: ஹால்மார்க் தங்கம் வாங்கினாலும் அதைச் சோதித்து பார்த்து வாங்குவதுதான் நமது பணத்துக்குப் பாதுகாப்பு. ராக்கெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அதிகரித்து வரும் விலைவாசியில் வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கம் தரமானதுதானா? என்று அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். நகைகள் மட்டுமின்றி, விலைமதிப்புமிக்க கற்கள், வைரம் உள்ளிட்ட கற்களின் தரத்தையும் பரிசோதிக்க வேண்டும்.

 ஹால்மார்க்: ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகளே பெரும்பாலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாம் அதிகம் உபயோகிக்கும் 22 காரட் தங்கத்தின் தரம் 916 (ஹால்மார்க்) என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது தங்கத்தின் முழுமையான தரம் 1000 என்று வைத்துக்கொண்டால், அதின் நெகிழ்வுத்தன்மைக்காக சேர்க்கப்படும் உலோகங்களின் சதவீதத்தை 1000-த்தில் இருந்து குறைத்துக் கொண்டு மீதம் உள்ள எண்ணிக்கையை தங்கத்தின் தரமாக கணக்கிடப்படுகிறது.

 22 காரட் தங்கத்துக்கு 916 போன்று 23 காரட்டுக்கு 958, 21 காரட்டுக்கு 875, 18 காரட்டுக்கு 750, 17 காரட்டுக்கு 708, 14 காரட்டுக்கு 585, 9 காரட்டுக்கு 375 என தங்கத்தின் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

 5 முத்திரைகள்: ஹால்மார்க் தங்க நகைகளை வாங்கும்போது பொதுமக்கள் முக்கியமாக 5 முத்திரைகளைக் கவனிக்க வேண்டும். இந்திய தர நிர்ணய அமைவனத்தின் முத்திரை, காரட்டின் மதிப்பு, வாங்கும் தங்கநகை இந்திய தர நிர்ணய அமைவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் வைத்து தங்கத்தின் தரம் (ஹால்மார்க்) கண்டறியப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் முத்திரை, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு, இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் (பி.ஐ.எஸ்) அங்கீகரிக்கப்பட்ட நகை விற்பனையாளர் அல்லது நகை உற்பத்தியாளரின் முத்திரை ஆகிய ஐந்து முத்திரைகள் நகைகளில் காணப்பட வேண்டும். நகை வாங்கும்போது பொதுமக்கள் விற்பனையாளரிடம் பூதக்கண்ணாடியைக் கேட்டு வாங்கி இந்த 5 முத்திரைகளையும் சோதித்து அறிய வேண்டும்.

 ஆய்வுக்கூடங்கள்: மேற்கூறிய அனைத்தையும் பரிசோதித்து நகைகளை வாங்கினாலும், மீண்டும் அதன் தரத்தின மேல் சந்தேகம் ஏற்பட்டால் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்களின் தரத்தை ஆய்வு செய்யும் கூடங்கள் உள்ளன. சென்னையைப் பொருத்தவரை சுமார் 5 கூடங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த ஆய்வுக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

 15 வகை சோதனைகள்: ஆய்வுக்கூடங்களில் நகைகள் மற்றும் கற்களின் நிறம், எடை, தன்மை, தரம் உள்ளிட்ட 15 வகை சோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த சோதனைகளை மேற்கொள்ளும்போது, நகைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தரம் பரிசோதிக்கப்பட்ட நகைகளை கடைகளில் வாங்கினாலும், மீண்டும் அதனை மற்றொரு இடத்தில் பரிசோதித்து சரிபார்ப்பதில் தவறில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் தனியார் ஆய்வுக்கூடத்தின் தலைமை "ஜெம்மாலஜிஸ்ட்' சந்தீப் குமார் கூறியது:

 தங்க நகைகளைப் பொருத்தவரை ஒரு நகைக்கு ரூ. 50 முதல் ரூ. 60 வசூலிக்கப்படும். விலையுயர்ந்த கற்கள், வைரம் உள்ளிட்டவற்றுக்கு அதன் எடை, கற்களின் எண்ணிக்கையைப் பொருத்து கட்டணம் வசூலிக்கப்படும். கற்களைப் பொருத்தவரை ரூ. 150 முதல் ரூ. 4000 வரை கூட கட்டணம் வசூலிக்கப்படும்.

 சாதாரண மக்கள் வாங்கிச் செல்லும் தங்க நகைகளுக்கு குறைவான அளவிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்தில் அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுவிடும்.

 இவ்வாறு பரிசோதிக்கப்படும் தங்கத்தின் தரத்தில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் புகார் தெரிவிக்கலாம். முறையான ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டால், நகை வாங்கிய குறிப்பிட்ட நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com