அவசர சிகிச்சை வசதியின்றி அவதிப்படும் புழல் சிறைக் கைதிகள்

சென்னை, ஆக. 17: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அவசர சிகிச்சை கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். சென்னை அருகே உள்ள புழலில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சிறையில் சுமார் 7 ஆயிரம் கைதிகள் அடை
அவசர சிகிச்சை வசதியின்றி அவதிப்படும் புழல் சிறைக் கைதிகள்
Updated on
2 min read

சென்னை, ஆக. 17: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அவசர சிகிச்சை கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர்.

சென்னை அருகே உள்ள புழலில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சிறையில் சுமார் 7 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறை புழல்- 1, புழல்- 2, பெண்கள் சிறை என 3 பிரிவுகளாக 212 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், புழல் 1-ல் சிறையில் விசாரணைக் கைதிகளும், புழல் 2-ல் தண்டனைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையாகக் கருதப்படும் இந்தச் சிறை, சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மிகவும் நவீன வசதிகளுடனும், அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ள இந்தச் சிறை, கைதிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த சிறையில் உள்ள கைதிகள் சிகிச்சை பெற போதிய வசதிகள் இல்லை., வெளி நோயாளி சிகிச்சைப் பிரிவு மட்டுமே உள்ளது. இங்கு பணிபுரியும் இரு மருத்துவர்கள், தினமும் சுமார் 400 கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

ஆனால் இவர்களால் கைதியின் நோயின் தீவிரம் அதிகமானாலோ, அவசர சிகிச்சை தேவைப்பட்டாலோ சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளப்படும் கைதிகளை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த மருத்துவமனையில்தான் கைதிகள் வார்டுகள் இருப்பதால், புழல் சிறை கைதிகள் இங்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். சென்னையில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளில் இந்த வார்டு கிடையாது.

கைதிகள் அவதி: இந்த தொலைவை பகல் வேளையில் கடப்பதற்கு ஒன்றரை மணிநேரம் வரையிலும், இரவு வேளையில் 45 நிமிஷத்துக்கு மேலாவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கைதிகளுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில், பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. சில வேளைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் கைதிகள், உயிர் இழக்கும் சம்பவமும் நடைபெறுவதாக சிறைத்துறை வட்டாரம் கூறுகிறது. ஆனால் இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சிறைத்துறை முயற்சி செய்ததாகத் தெரியவில்லை.

சென்னை சென்ட்ரலில் மத்திய சிறை இருந்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சிறை நிர்வாக வசதிக்காகவும், மருத்துவ வசதி உடனடியாக கிடைக்கும் என்பதாலும் ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் கைதிகள் வார்டு அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 2006-ல் மத்திய சிறை, புழலுக்கு மாற்றப்பட்டபோது இந்த வார்டு அங்கிருந்து மாற்றப்படவில்லை.

இதன் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக நோயினால் வாடும் கைதிகள் அவசர சிகிச்சை பெற முடியாமலும், தற்கொலைக்கு முயல்வோர் சிகிச்சை பெற முடியாமலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 6 ஆண்டுகளாக இப் பிரச்னை இருப்பது தெரிந்தும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை, அருகில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கோ அல்லது வேறு அரசு மருத்துவமனைக்கோ மாற்றுவதற்கு முயற்சி எடுக்கவில்லை என சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இனிமேலாவது இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அவசர சிகிச்சை பெறும் வகையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கைதிகள் வார்டை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இல்லையெனில் புழல் சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளுடனும், கைதிகள் எந்தநேரமும் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com