முதல்முறையாக இரவு ரோந்துப் பணியில் நுண்ணறிவுப் பிரிவு

சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் (ஐ.எஸ்) முதல் முறையாக இரவு
Updated on
2 min read

சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் (ஐ.எஸ்) முதல் முறையாக இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள்  இரவு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பிற போலீஸாரை கடந்த ஒரு மாதமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதனால் இரவு பணியில் உள்ள காவலர்கள் முழுமையாக ஈடுபடுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையர் தலைமையின் கீழ் 8 உதவி ஆணையர்கள், 29 இன்ஸ்பெக்டர்கள், 33 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 375 போலீஸாருடன் இயங்கி வருகிறது. 

இதில் ஒரு காவல் மாவட்டத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்றும், ஒரு மண்டலத்துக்கு ஒரு உதவி ஆணையர் என்றும் செயல்படுகின்றனர்.

ஆணையருக்கு தேவையான ரகசியத் தகவல்களையும்,  சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்,  காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கை பற்றிய தகவல்களையும், காவல் நிலையங்களுக்குள் நடைபெறும் சம்பவங்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்து ஆணையருக்கு வழங்குவது நுண்ணறிவு பிரிவின் பிரதான பணியாகும்.  இது தவிர அரசியல் கட்சிகள்,  தடை செய்யப்பட்ட இயக்கங்கள்,  ரௌடி மற்றும் குற்றவாளிகளின் நடவடிக்கை போன்றவற்றையும் கண்காணித்து ஆணையருக்கு தகவல் அளிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், குற்றங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக இரவில் போலீஸாரின் ரோந்து பணியையும், கண்காணிப்பு பணியையும் துரிதப்படுத்தினார்.   இருப்பினும் பல காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் இரவு ரோந்துப் பணிக்கு செல்லாமல் வீட்டுக்கு செல்வதாகவும், சிறிது நேரம் பணியில் இருந்துவிட்டு பின்னர் ஓய்வெடுக்க செல்வதாகவும் புகார்கள் வந்தனவாம்.

ரோந்துப் பணியில் நுண்ணறிவுப் பிரிவு: இதனால் இரவு ரோந்துப் பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளையும், காவலர்களையும் முழுமையாக அந்த பணியில் ஈடுபட வைப்பதற்கும்,  அவர்களை கண்காணிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என உயர் அதிகாரிகள் ஆலோசித்தனர்.  இதில் ரோந்துப் பணியிலும்,  கண்காணிப்பு பணியிலும் ஈடுபடும் போலீஸôரை கண்காணிக்கும் வகையில் நுண்ணறிவு பிரிவினரை ஈடுப்படுத்த முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த ஒரு மாதமாக இரவு ரோந்துப் பணியில் நுண்ணறிவு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு  காவல் மாவட்டத்துக்கு ஒரு தலைமைக் காவலரும், மண்டலத்துக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் என்ற வகையில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் நுண்ணறிவு போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப் பணியில் ஈடுபடும் தலைமைக் காவலர்,  சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் சுழற்சி முறையில் ரோந்துப் பணிக்கு வருகின்றனர்.

பெருநகர காவல்துறையின் 150 ஆண்டுகால வரலாற்றில் நுண்ணறிவு போலீஸார் ரோந்து செல்வது, இதுவே முதல்முறை என அப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இரவு ரோந்துப் பணியில் இருக்கும் நுண்ணறிவு போலீஸார்,  தங்களது வரம்புக்குட்பட்ட காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பற்றிய தகவல்கள்,  இரவு ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகள்,  காவலர்களின் நடவடிக்கை பற்றிய விவரங்கள் ஆகியவற்றை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர்.

நுண்ணறிவு பிரிவு போலீஸார், ரோந்துப் பணியை கண்காணிப்பதால் போலீஸார் தங்களது பணியிலேயே முழு கவனத்தையும் செலுத்துகின்றனர். தங்களது பணியை விட்டு வேறு எங்காவது செல்லும் போலீஸார் பற்றிய தகவலை நுண்ணறிவு பிரிவினர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுகின்றனராம். இதனால் விளைவாக போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி முன்பைக் காட்டிலும் கடுமையாக இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றங்கள் குறைந்துள்ளன: அதோடு மட்டுமன்றி இரவில் சுவர் விளம்பரம் செய்கிறவர்கள், சுவரொட்டி ஒட்டுபவர்கள், குற்றவாளிகளின் நடமாட்டம் ஆகியோரைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அனுப்புவதால் பெருமளவு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளும், குற்ற நடவடிக்கைகளும் தவிர்க்கப்பட்டுள்ளதாக நுண்ணறிவு பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இரவு முழுவதும் போலீஸார் முழுமையாக ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதால் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகிறார். இத் திட்டத்துக்கு அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதாகவும் பெருநகர காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

அதேநேரத்தில் ஏற்கெனவே பணிச்சுமையில் இருக்கும் நுண்ணறிவு போலீஸார், இரவு ரோந்துப் பணியின் மூலம் தங்களுக்கு மேலும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.  இதனால் பணிச்சுமை அதிகரிக்காத வகையில் இரவு ரோந்துப் பணியில் தங்களை ஈடுபடுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com