154 கைதிகள் எழுதுகின்றனர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வு

சென்னை, மார்ச் 2: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை தமிழக சிறைகளில் 154 கைதிகள் இந்த ஆண்டு எழுதுகின்றனர். இதற்காக சென்னை, கோவை மத்திய சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ச
154 கைதிகள் எழுதுகின்றனர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வு
Updated on
2 min read

சென்னை, மார்ச் 2: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை தமிழக சிறைகளில் 154 கைதிகள் இந்த ஆண்டு எழுதுகின்றனர்.

இதற்காக சென்னை, கோவை மத்திய சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 94 துணை சிறைகள், 5 சிறப்பு துணை சிறைகள், 12 சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், 2 திறந்தவெளி சிறைகள் உள்ளன. இவற்றில் சுமார் 22 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு கைதிகளுக்கு அடிப்படைக் கல்வி, பள்ளி கல்வி, கல்லூரிக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, உயர் கல்வி என 5 வகையான கல்வி அளிக்கப்படுகிறது. இதில் அடிப்படை கல்வியை அதிகமானோர் படிக்கின்றனர். கடந்த 2007-ம் கல்வி ஆண்டில் 1086 கைதிகள் அடிப்படை கல்வி பயின்றனர். இது 2010-ம் ஆண்டு 1,553 ஆக அதிகரித்துள்ளது.

இருமடங்கு அதிகரிப்பு: அதேவேளையில் இந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 39 கைதிகளும், பிளஸ் 2 தேர்வை 19 கைதிகளும் எழுதினர். இந்த ஆண்டு அது கணிசமாக அதிகரித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 66 கைதிகளும், பிளஸ் 2 தேர்வை 88 கைதிகளும் எழுத உள்ளனர்.

பொதுத் தேர்வை எழுத உள்ள கைதிகளுக்கு, தினமும் 6 மணிநேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு சிறையிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் 5 ஆசிரியர்கள், இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொதுத் தேர்வு எழுதும் கைதிகளின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதத்துக்கு குறையாமல் ஒவ்வொரு ஆண்டு இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல ஒவ்வொரு கைதியும் கல்வி கற்பதற்கு முனையும்போது, அவர்கள் கல்வி கற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாக சிறைத் துறையினர் கூறுகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ. 300, பிளஸ் 2 தேர்வு கட்டணம் ரூ.230 என மொத்தம் 154 பேருக்கு ரூ.17,310-ஐ கட்டணமாக பள்ளி கல்வித்துறைக்கு செலுத்தியுள்ளது சிறைத் துறை.

மேலும் கைதிகள் எவ்வித நெருக்கடியும் இன்றி தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக கோவை மத்திய சிறையிலும், சென்னை மத்திய சிறையிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாழ்வியல் பயிற்சி: சிறைவாசிகள் என்ன படிக்க விரும்புகிறார்களோ, அதற்கான உதவியை சிறைத் துறை செய்கிறது.

கல்விச்சார்ந்த படிப்புகள், தொழில் படிப்புகள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. சிறையில் கல்வியை முறைப்படுத்த மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்று சிறைத்துறை இயக்குநர் ஏ.டி.ஜி.பி. எஸ்.கே. டோக்ரா தெரிவித்தார்.

மேலும், சிறைவாசிகள் திருந்தி வாழ்வதற்காக யோகா, தியானம் உள்ளிட்ட வாழ்வியல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களை ஆக்கபூர்வமாக சிந்திக்கவும், செயல்படவும் வைப்பதாக டோக்ரா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com