சென்னை, மார்ச் 4: ரயில் நிலைய உணவகங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் உணவுகளுக்கு, விலைப்பட்டியலைக் கட்டாயமாக வைக்க வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்களுக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
ரயில்களில் உள்ள உணவுக்கூடங்கள் மற்றும் ரயில் நிலையக் கடைகளில் நிர்ணயித்த விலைக்கும் மேலாக உணவுப்பொருள்கள் விற்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து ரயில்வே துறை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமாக உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்று தெற்கு ரயில்வே கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை ரயில் நிலையங்களில் உணவுக்கூடங்கள் வைத்துள்ள ஒப்பந்தக்காரர்கள் பின்பற்றுவார்களா என்ற கேள்வி பயணிகளிடையே எழுந்துள்ளது. ரயில் நிலையங்களில் காலம்காலமாக அதிக விலையில்தான் உணவுப்பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
ரயில் நிலையங்களில் உணவுக் கடைகள் அமைக்கும் ஒப்பந்தக்காரர்கள் ரயில்வே துறை நிர்ணயிக்கும் விலையை பின்பற்றுவதில்லை. மேலும் ரயில்வே துறை கொடுக்கும் உணவு விலைப்பட்டியல்களை பல ஆண்டுகளாக ரயில் நிலைய உணவுக்கூடங்களில் உரிமையாளர்கள் ஒட்டுவதில்லை. இப்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இந்த உத்தரவை ஒப்பந்தக்காரர்கள் எந்தளவு பின்பற்றுவார்கள் என்பது தெரியவில்லை.
ரயில்வே துறை நிர்ணயித்துள்ள உண்மையான உணவுப்பொருளின் விலை என்ன என்ற ஆவல் பயணிகளிடம் மேலோங்கியுள்ளது.
பொதுவாக ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் அதிகம் வாங்குவது தண்ணீர் பாட்டில்கள்தான், ஆனால் வெளியில் ரூ.12-க்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் ரயில்வே உணவுக் கடைகளில் ரூ.15-க்கு விற்கப்படுகிறது.
அவசரமாக ரயிலைப் பிடிக்க வரும் பயணிகள் பெரும்பாலும் அதிக விலையில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களையே வாங்கிச் செல்கின்றனர். தண்ணீர் பாட்டில்கள் மட்டுமல்லாமல் அனைத்துப் பொருள்களுமே ரயில் நிலையங்களில் அதிகளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சில்லறைத் தட்டுப்பாடு: ரயில் நிலைய உணவகங்களில் விற்கப்படும் பொருள்களை வாங்கும் பயணிகளுக்கு சரியான சில்லறை கொடுப்பதில்லை. உதாரணத்துக்கு கடைகாரரிடம் ரூ.20 கொடுத்து ரூ.15 மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட்டை வாங்கினால், மீதமுள்ள ரூ.5 சில்லறையை கடைகாரர்கள் கொடுப்பதில்லை.
அதற்குப் பதிலாக ரூ.5 மதிப்புள்ள வேறு உணவுப்பொருளை வாடிக்கையாளரிடம் வலுக்கட்டாயமாக திணிக்கின்றனர்.
இதனையும் மீறி வாடிக்கையாளர்கள் சரியான சில்லறையைக் கேட்டால் அவர்களை இழுத்தடித்த பின்பே சில்லறையைத் தருகின்றனர். இதனையும் தெற்கு ரயில்வே கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
தரத்தையும் கண்காணிக்க வேண்டும்: ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் விற்கப்படும் உணவுப்பொருள்களின் தரத்தையும் அவ்வப்போது தெற்கு ரயில்வே கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் பயணிகளுக்கு தரமான உணவுப்பொருள்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் பயணிகளின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகிறது. எனவே ரயில் பயணிகளின் உடல்நலத்தை மனதில் கொண்டு தரமான உணவுப்பொருளை வழங்கிட தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பெரும்பான்மையானோரின் விருப்பம்.
புகார்: நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறாக, அதிக விலைக்கு ரயில் நிலையங்களிலோ, ரயில்களிலோ உணவுப்பொருள்களை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட ரயில் நிலைய மேலாளர் மற்றும் கோட்ட வர்த்தக அலுவலரிடம் புகார் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் ரயில் நிலையங்களில் உள்ள உணவுப்பொருள் விற்பனைக் கடைகளை ரயில்வே நிர்வாகம் நேரடியாக நடத்தலாம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்பதும் பயணிகளின் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

