

திருவொற்றியூர், மே 1: துறைமுகத்துக்குச் செல்லும் கன்டெய்னர் லாரிகள் 30 கி.மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தொடர் விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இப்பிரச்னையைத் தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து டிரைலர் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர். ராஜா கூறியது:
சென்னைத் துறைமுகத்திற்கு வரும் லாரிகளுக்கு அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வியாசர்பாடி சாலைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் ஒரு முனையம் மட்டுமே இருந்தபோது ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் கன்டெய்னர்கள்தான் கையாளப்பட்டன. இப்போது இரண்டு முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 15 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. துறைமுகத்தில் ஜீரோ நுழைவு வாயிலில் மட்டுமே கன்டெய்னர் லாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் நெரிசல் அதிகரித்துள்ளது என்றார் ராஜா.
விபத்துகளுக்கு காரணம் என்ன? சென்னைத் துறைமுகத்திற்குச் சென்று வரும் கன்டெய்னர் லாரிகளால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாள்களில் மட்டும் போக்குவரத்துக் காவலர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறுகலாக உள்ள சாலைகளில் கன்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. லாரி டிரைவர்கள் நாள்கணக்கில் வரிசையில் நிற்பதால் போதுமான ஓய்வின்றி தூக்க கலக்கத்திலேயே வண்டியை ஓட்டுகின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.
60 அடி நீளமுள்ள கன்டெய்னர் லாரிகளை ஓட்ட அனுபவமிக்க டிரைவர்கள் அவசியம். கடந்த 10 ஆண்டுகளில் இத்துறைக்குத் தேவையான லாரி டிரைவர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. கிளீனராக இருந்து கற்றுக் கொண்டால்தான் இவ்வகை லாரிகளை ஓட்டுவது எளிது. கீளினர் வேலைக்கு முன்புபோல் யாரும் விரும்பி வருவது இல்லை. இப்போது ஓடும் 75 சதவீத கன்டெய்னர் லாரிகள் கிளீனர் இல்லாமல்தான் இயங்கி வருகின்றன. இதுவும் விபத்து ஏற்பட காரணமாக உள்ளது என்கிறார் இன்டர்ஸ்டேட் கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வி.முத்துகிருஷ்ணன்.
அதிகாரிகள் மெத்தனம்: இது குறித்து பல்வேறு தரப்பினரும் தெரிவித்த கருத்துக்கள்:
கன்டெய்னர் லாரிகளை ஒரு சாலையில் தடை செய்தால் அந்த லாரிகள் இன்னொரு சாலையை ஆக்கிரமிக்கின்றன. துறைமுக இணைப்புச் சாலைகளில் கூடுதல் லாரிகள் வந்தால் அதற்கேற்ப நுழைவு வாயில்களை அதிகப்படுத்தி நெரிசலைக் குறைக்கலாம். சாலைகளை அகலப்படுத்தலாம்.
இதைவிடுத்து ஒரே சாலையில், ஒரே நுழைவு வாயிலில்தான் செல்ல வேண்டும் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.
கன்டெய்னர் லாரிகள் நெரிசலுக்கு துறைமுக நிர்வாகம், சுங்கத் துறை, போக்குவரத்துக் காவல், சரக்குப் பெட்டக முனையங்கள், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அவரவர் பங்கிற்கு காரணமாக உள்ளனர்.
தொழிலும் வளர வேண்டும், அதேநேரம் பொதுமக்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் இப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.