இன்று "இந்தோ - சராசனிக்' கட்டடக் கலையின் அடையாளம்...

'இந்தோ - சராசனிக்' கட்டடக் கலையின் மிகச் சிறந்த அடையாளமாகத் திகழும் சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம் ரூ.13 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டதாகும். இந்தக் கட்டடம் கட்டும் பணி 1888 அக்டோபரில் தொடங்கியது
இன்று "இந்தோ - சராசனிக்' கட்டடக் கலையின் அடையாளம்...
Updated on
1 min read

'இந்தோ - சராசனிக்' கட்டடக் கலையின் மிகச் சிறந்த அடையாளமாகத் திகழும் சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம் ரூ.13 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டதாகும்.

இந்தக் கட்டடம் கட்டும் பணி 1888 அக்டோபரில் தொடங்கியது. ஜே.டபிள்யூ. பிராசிங்டன் என்ற கட்டடக் கலை நிபுணரின் மேற்பார்வையில் அவர் உருவாக்கிய கட்டட வடிவமைப்பின் அடிப்படையில் பணிகள் தொடங்கின. எனினும், எழும்பூர் ரயில் நிலையக் கட்டடம், ராஜாஜி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கட்டடம், சென்னை சட்டக் கல்லூரிக் கட்டடம் ஆகியவற்றை உருவாக்கிய ஹென்றி இர்வின் என்ற கட்டடக் கலைஞரின் மேற்பார்வையில் 1892 ஜூலையில் உயர் நீதிமன்றத்தின் கட்டடப் பணிகள் நிறைவு பெற்றன.

மொத்தம் ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் உயர் நீதிமன்றக் கட்டடப் பணிகளை முடிப்பதென தீர்மானிக்கப்பட்டது. பணிகள் முடியும்போது ரூ.12 லட்சத்து 98 ஆயிரத்து 163 செலவாகியிருந்தது.

ஐரோப்பிய கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், சென்னையின் காலநிலைக்கேற்ப வராண்டாக்கள், முற்றங்கள் போன்றவைகளையும் சேர்த்து இந்தக் கட்டடம் உருவாக்கப்பட்டது.

லண்டன் நீதிமன்றத்துக்கு அடுத்து உலகிலேயே மிகப் பெரிய நீதிமன்றக் கட்டடம் எனப் போற்றப்படும் சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம், சென்னை மாநகருக்கான மிக முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

கலையிலும் கரை கண்ட நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் நூற்றாண்டு விழா 1962-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அந்த விழாவில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எல். வெங்கட்ராமய்யர் கர்நாடக இசைப் பாடல்களைப் பாடியுள்ளார். அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞராக இருந்த வி.பி.ராமன், நீதிபதியின் பாடலுக்கு வயலின் இசைத்துள்ளார்.



பராசரன் - ஒரு சட்டக் கருவூலம்

எதிர்த் தரப்பு வழக்குரைஞர்களாலும் மனம் திறந்து பாராட்டப்படும் சட்ட மேதை தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கே.பராசரன்.

1927-ம் ஆண்டு பிறந்த பராசரன், 62 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் மிக மூத்த வழக்குரைஞர்களில் ஒருவர்.

1983-ல் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சட்டத் துறையின் கருவூலமாகத் திகழும் பராசரனின் சேவையை போற்றும் வகையில், நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக மத்திய அரசு இவரை கடந்த ஜூன் மாதம் நியமித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com