மொழிபெயர்ப்பு அதிகரித்தால் மொழிகளின் வளம் அதிகமாகும்: செவாலியே விருது பெற்ற வெ. ஸ்ரீராம்

சென்னை, ஜன. 10: மொழிபெயர்ப்பு இலக்கியங்களை அதிகம் உள்வாங்கும் மொழிகள் எளிதில் வளமாகும் என்று செவாலியே விருது பெற்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் வெ. ஸ்ரீராம் கூறினார்.  ஒரே ஆண்டில் (2001) 2 முறை செவாலியர்

சென்னை, ஜன. 10: மொழிபெயர்ப்பு இலக்கியங்களை அதிகம் உள்வாங்கும் மொழிகள் எளிதில் வளமாகும் என்று செவாலியே விருது பெற்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் வெ. ஸ்ரீராம் கூறினார்.

 ஒரே ஆண்டில் (2001) 2 முறை செவாலியர் விருது பெற்றவர், பிரெஞ்சு மொழியில் இருந்து நேரடியாக தமிழில் பல்வேறு படைப்புகளை மொழிபெயர்த்தவர் ஸ்ரீராம். சென்னை புத்தகக் காட்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்த அவர் கூறியது:

 1971 முதல் 1974-ம் ஆண்டுவரை பிரெஞ்சு மொழியில் முதுநிலை படிப்பு வரை படித்தேன். முதல்முறையாக 1980-ம் ஆண்டு ஆல்பர் காம்யுவின் நாவல் அந்நியனை தமிழில் மொழிபெயர்த்தேன். உலகில் பைபிளுக்குப் பின் அதிக மொழிகளில் (சுமார் 200) மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் இது.

 அடுத்து 1986-ல் பெரிய சிந்தனையாளரும், தத்துவ ஞானியும், இலக்கியவாதியுமான ழீன் பால் சார்த்தரின் நாடகத்தை "மீள முடியுமா' என்ற பெயரில் மொழிபெயர்த்தேன். மேலும், அந்த்வாந்த் செயிந்த் எக்சுபெரியின் "குட்டி இளவரசன்' என்ற படைப்பை மொழிபெயர்த்தேன்.

 "டாக் ப்ரெவெர்' என்பதை "சொற்கள்" என்ற பெயரிலும், சின்னசின்ன வாக்கியங்கள், தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் உள்பட 9 நூல்களை இதுவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

 பொதுவாக பிறமொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் அடுத்த மொழியில் மொழிபெயர்க்கப்படுகின்றன. தமிழில் வரும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் வழியாகவே மொழிபெயர்க்கப்படுகின்றன.

 எந்த ஒரு மொழியின் இலக்கியத்தையும் நேரடியாகவே அதிலிருந்து நாம் மொழிபெயர்த்தால் அதனுடைய சாரம், கருத்துச் சிதைவு குறையாமல் இருக்கும். பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும், பின்னர் அதில் இருந்து தமிழ் மொழிக்கும் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களை படித்திருக்கிறேன். அதில் சுவை குறைவாக இருக்கும். எனவேதான், பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்க முடிவு செய்தேன்.

 பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் அதிக மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் வருவதால் அவை எளிதில் வளர்ச்சி பெற்று வருகின்றன. அதன் வளமையும் அதிகரித்துவிட்டன. ஆனால், தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறைவு. மொழிபெயர்ப்பு இலக்கியங்களை அதிகமாக உள்வாங்கும் மொழி எளிதில் வளமாகும்.

 மொழிபெயர்ப்பு செய்தால் குறைந்த ஊதியம் கிடைக்கிறது என்பதாலும், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் இன்னமும் தமிழ் வாசகர்களை முழுமையாக எட்டாததாலும் மொழிபெயர்ப்புப் பணிக்கு யாரும் வருவதில்லை என்றார் வெ. ஸ்ரீராம்.

 35 ஆண்டுகள் எல்.ஐ.சி.யில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வுப்பெற்ற இவர், பிரெஞ்சு மொழியில் இருக்கும் தரமான இலக்கியங்களை தமிழக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com