தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த புதிய வாகனம்

சிறிய அளவிலான தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தி, அணைப்பதற்காக ஜீப் வடிவிலான புதிய வாகனங்களை தீயணைப்புத்துறை அறிமுகம் செய்துள்ளது.
தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த புதிய வாகனம்
Updated on
2 min read

சிறிய அளவிலான தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தி, அணைப்பதற்காக ஜீப் வடிவிலான புதிய வாகனங்களை தீயணைப்புத்துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 32 ஆயிரம் தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் 31 ஆயிரம் தீ விபத்துகள் சிறிய அளவிலானவை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் மொத்தம் 32,273 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 31,414 தீ விபத்துகள் சிறிய அளவிலான விபத்துகளாகும்.

இந்த விபத்துகளில் 87 பேர் இறந்துள்ளனர், 3,659 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். விபத்துகளில் ரூ.27.02 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்துள்ளன, ரூ.337.99 கோடி மதிப்புள்ள சொத்துகள் விபத்துகளில் இருந்து சேதமில்லாமல் மீட்கப்பட்டுள்ளன

ஆண்டுக்கு சராசரியாக 30 சதவீதம் அளவுக்கு தீ விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தீ விபத்துகளும், அதனால் ஏற்படும் சேதங்களும் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்புத் துறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் பெரியளவில் நவீனமயமாக்கலும், மாற்றங்களும் நிகழாமல் இருந்தன.

தீ விபத்துகளின் கோரமுகத்தை உணரத் தொடங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள் இப்போது தீயணைப்புத்துறையை நவீனமயமாக்குவதற்குரிய நடவடிக்கையை படிப்படியாக எடுத்து வருகின்றன.

மொத்த தீ விபத்துகளில் 80 சதவீதத்துக்கும் மேல் சிறிய தீ விபத்துகளாக இருப்பதால், அந்த வகை தீயை உடனடியாக அணைத்தால் பெரும் சேதத்தையும், உயிர் இழப்புகளையும் குறைக்க முடியும் என தீயணைப்புத் துறையினர் கருதினர்.

புதிய வாகனங்கள்: இதன் விளைவாக சிறிய வகை தீ விபத்துகளை உடனே சென்று அணைக்கும் வகையில் தமிழக தீயணைப்புத் துறைக்கு ஜீப் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் சுமார் 650 லிட்டர் கொள்ளளவு தண்ணீர் டாங்க் இணைக்கப்பட்டுள்ளது. அதனுடன் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் மோட்டார், தீயை விரைவாக அணைப்பதற்காக தண்ணீருடன் கலக்க பயன்படும் வேதிப் பொருள்கள் அடங்கிய மற்றொரு டாங்க் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.

இது குறித்து தீயணைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

பொதுவாக சிறிய தீ விபத்துகள் மக்கள் நெருக்கம் மிகுந்த குடிசைப் பகுதிகள், சிறிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் ஏற்படுகின்றன. இப்பகுதிகளில் சாலைகள் மிகக் குறுகலாக இருக்கும்.

இதன் காரணமாக, தீயை விரைவாக அணைப்பதில் சிரமமும், சில வேளைகளில் கால தாமதமும் ஏற்படுகின்றன. இதனால், உயிரிழப்புகளும், அதிக பொருள் சேதமும் ஏற்பட்டு விடுகின்றன. இதைக் கருத்தில் கொண்டே, ஜீப் வடிவிலான வாகனங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் நெரிசல் மிகுந்த மற்றும் குறுகலான சாலைகளில் கூட எளிதாக சென்றுவர முடியும்.

எங்கிருந்து வாங்கப்பட்டது? முதல் கட்டமாக 5 வாகனங்கள் ரூ.53 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளன. இவை சென்னையின் முக்கியமான தீயணைப்பு நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் குஜராத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் 52 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இதற்கான நிதியை மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் தீயணைப்புத் துறைக்கு தந்துள்ளன.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்படும் என்றார் அவர்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com