புழல் மத்திய சிறையில் திறக்கப்பட்ட விற்பனை அங்காடிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பிற மத்திய சிறைகளில் அங்காடிகளை திறப்பதற்குரிய ஏற்பாடுகளை சிறைத்துறையினர் செய்து வருகின்றனர்.
புழல் மத்திய சிறையில் கடந்த 9-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறை அங்காடியை திறந்தார். புழல் சிறை அங்காடியில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பிரட், கேக், ரொட்டி, சப்பாத்தி, மிக்சர், திருநெல்வேலி அல்வா,சிப்ஸ் வகைகள்,மசாலா வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களும், காலணிகள், மழைக்கோட்டு, மெழுகுவர்த்தி, கொசுவலை, ஆயத்த ஆடைகள், துணி வகைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்படுகின்றன. இந்த அங்காடி தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும்.
4 கைதிகள் விற்பனையாளர்களாகவும், 3 சிறைத்துறை அதிகாரிகள் கண்காணிப்பாளராகவும் இந்த அங்காடியை இயக்குகின்றனர்.
இந்த அங்காடிக்காகவே புழல் சிறையிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய அடுமனையும் (ஆஹந்ங்ழ்ஹ் மய்ண்ற்) திறக்கப்பட்டுள்ளது. இது தவிர வேலூர், கோயம்புத்தூர், மதுரை,திருச்சி,பாளையங்கோட்டை,கடலூர் ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறைகளில் இருந்து பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன.
உதாரணமாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து திருநெல்வேலி அல்வா,மிக்சர்,சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குதீனிகள் கொண்டு வரப்படுகின்றன.
மதுரை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து ஆயத்த ஆடைகள், துணி வகைகள், வேலூரிலிருந்து காலணிகள்,சேலத்திலிருந்து பாத்திர வகைகள்,கைத்தறி துணி வகைகள்,திருச்சியில் இருந்து நோட்டுகள்,குறிப்பேடுகள்,பைல்கள் உள்ளிட்ட காகிதத்திலான பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன.
தரத்துடனும், குறைவான விலையிலும் சிறை அங்காடியில் பொருள்கள் விற்கப்படுவதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சிறைத்துறையினர் கூறுகின்றனர்.
கடந்த 10ம் தேதி ரூ.6 ஆயிரத்துக்கு பொருள்கள் விற்பனையாகியுள்ளன. 12-ம் தேதி ரூ.15 ஆயிரத்துக்கு பொருள்கள் விற்பனையாகியுள்ளது. இது படிப்படியாக உயர்ந்து 16-ம் தேதி ரூ.25 ஆயிரத்துக்கு பொருள்கள் விற்பனையாகியுள்ளதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.
மற்ற பொருள்களை காட்டிலும் கேக்,பிரட்,நெல்லை அல்வா உள்ளிட்ட உணவுப் பொருள்களே அதிகம் விற்பனையாவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கைதிகளுக்கு ஒரு தொழிலை கற்றுக் கொடுப்பதோடு அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் இந்த சிறை அங்காடி திறக்கப்பட்டது.
ஒரு வாரத்தில் திறக்கத் திட்டம்: இந்த அங்காடிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், வேலூர்,திருச்சி,கோயம்புத்தூர்,சேலம்,மதுரை,பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் ஒரு வாரத்துக்குள் இந்த அங்காடிகளை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சிறைத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த அங்காடிகளிலும் புழல் சிறை அங்காடியில் கிடைக்கும் அனைத்து பொருள்களும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.