தமிழகத்தில் முதல்முறையாக சென்னை புழல் சிறையில் கைதிகளுக்காக தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.) தொடங்கப்பட்டுள்ளது. இதில் 120 விசாரணைக் கைதிகள் பயிலுகின்றனர். இதர மத்திய சிறைகளிலும் விரைவில் ஐ.டி.ஐ. நிலையங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக சிறைக் கைதிகளிடம் கல்வியின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணரச் செய்ததன் விளைவாக, கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழக சிறைகளில் கைதிகளுக்கு 5 வகையான கல்வி அளிக்கப்பட்டு வந்தது. அடிப்படைக் கல்வி, பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பட்டயப் படிப்பு, உயர் கல்வி ஆகியவையே கடந்தாண்டு வரை அளிக்கப்பட்டது. இவற்றோடு 6-வதாக தொழிற்கல்வியும் இணைந்துள்ளது.
ஒரு கல்வி ஆண்டில் சுமார் 1,500 கைதிகள் அடிப்படை கல்வி படிக்கின்றனர். இதேபோல 200 கைதிகள் பட்டப்படிப்பும், 350 கைதிகள் பட்டயப்படிப்பும் படித்து வருகின்றனர். கைதிகளை ஊக்குவிக்கும் விதமாக 2010- ல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரி தொடங்கப்பட்டது. இருப்பினும் பட்டப்படிப்பு படித்து சிறையைவிட்டு வெளியே செல்லும்போது, வேலை தேட வேண்டிய சூழ்நிலை இருந்ததால், பெரும்பாலான கைதிகள் அண்மைக்காலம் வரை பட்டயப்படிப்பே படிக்க ஆர்வம் காட்டி வந்தனர். இதன் விளைவாக பட்டப்படிப்பு படிப்போரின் எண்ணிக்கை குறைந்தும், பட்டயப் படிப்பு படிப்போரின் எண்ணிக்கை உயர்ந்தும் வந்தது.
பட்டயப்படிப்பு படித்தால் சொந்தத் தொழில் தொடங்கலாம் என்ற எண்ணம் கைதிகளிடம் ஏற்பட்டதாலே அந்தப் படிப்புக்கும் மதிப்பு அதிகமாக இருந்தது. இதை உணர்ந்த சிறைத்துறை நிர்வாகம், மத்திய சிறைகளில் தொழிற்கல்வி படிப்பைத் தொடங்க திட்டமிட்டது. இதனால் கைதிகள் சிறையை விட்டு வெளியே செல்லும்போது, யாரையும் சார்ந்து இல்லாமல் தாங்களே சொந்தத் தொழில் செய்ய முடியும் என சிறைத்துறை உயர் அதிகாரிகள் நினைத்தனர்.
14 படிப்புகள்: இதன் விளைவாக கடந்த வாரம் சென்னை புழல் மத்திய சிறையில், விசாரணைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது பகுதியில் ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டது. தமிழகத்திலேயே இங்குதான் முதல்முதலில் ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 14 பிரிவுகள் தொடங்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இப்போதைக்கு இந்திய இனிப்பு வகைகள் மற்றும் உணவு வகைகள், பாதுகாவலர் பணி, சில்லறை வணிகம், மருத்துவமனை பராமரிப்பு, பி.பீ.ஓ. படிப்பு உள்பட 7 படிப்புகள் தொடங்கப்பட்டன.
இந்தப் படிப்புகளுக்கு வாரத்தில் திங்கள்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 5 நாள்கள் வகுப்புகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. இப் படிப்புகளுக்கு மொத்தம் 150 மணி நேரத்தில் இருந்து 170 மணி நேரம் வரை கைதிகள் வகுப்பில் இருக்க வேண்டும் என கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் நிறைவடையும் தருவாயில் கைதிகளுக்கு தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்தப் படிப்பை புழல் சிறையில் 120 கைதிகள் பயிலுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 20 வயது முதல் 30 வயதுக்குள்பட்டவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளையே முதல் கட்டமாக இந்தப் படிப்பில் சேர்த்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்தக் கட்டமாக வேலூர், பாளையங்கோட்டை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மத்திய சிறைகளிலும் இப் படிப்பை தொடங்குவதற்குரிய நடவடிக்கையில் சிறைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் வெளியில் இருந்து குற்றவாளிகளாக சிறைக்கு வருகிறவர்கள், சிறையைவிட்டு செல்லும்போது ஏதாவது ஒரு தொழில் தெரிந்த நல்ல தொழிலாளியாக செல்வார் என சிறைத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
சிறையை விட்டு வெளியே செல்லும் கைதிகள் மீண்டும் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்களது பொருளாதார சூழ்நிலையும், அவர்களது குடும்ப சூழ்நிலையும் எந்தவிதத்திலும் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஐ.டி.ஐ. படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை கைதிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே சிறைத்துறை அதிகாரிகளின் விருப்பமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.