"மலத்தில் ரத்தம் வெளியேறினால் மருத்துவரை அணுக வேண்டும்'
By dn | Published On : 04th July 2013 02:22 AM | Last Updated : 04th July 2013 02:22 AM | அ+அ அ- |

வாந்தி மற்றும் மலத்தின் வாயிலாக ரத்தம் வெளியேறினால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இரைப்பை, குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.ரவி தெரிவித்தார்.
சென்னையில் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் "இரைப்பை குடல் ரத்த கசிவு மையத்தை' சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் டாக்டர் ஆர்.ரவி கூறியதாவது: இரைப்பை மற்றும் குடலில் ஏற்படும் ரத்தக் கசிவானது, ரத்த வாந்தியாகவோ அல்லது மலத்தில் ரத்தம் கலந்தோ வெளிபடுகிறது.
சில நேரங்களில் வயிறு மற்றும் இரைப்பையிலேயே தேங்கிவிடும். இதன் காரணமாக ரத்தம் நிறம் மாற்றமடைந்து வாந்தியெடுக்கும்போது, காபி தூள் போலவும் அல்லது மலத்தில் கருப்பு நிறத்தில் தார்போலவும் தோற்றமளிக்கக் கூடும். இதன் காரணமாக நோயாளிகள் தலை சுற்றல், மயக்கமடைதல், மூச்சுவிட இயலாத நிலை, பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இரைப்பை குடல் ரத்த கசிவு உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்ககூடிய தன்மையைக் கொண்டிருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த இரைப்பை குடல் ரத்த கசிவு மையத்தில் செரிமானப் பாதையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார் டாக்டர் ஆர்.ரவி.
இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையின் மண்டல இயக்குநர் விஜயரத்னா, இரைப்பை குடலியல் துறை நிபுணர் டாக்டர் பி.பாசுமணி ஆகியோர் பங்கேற்றனர்.