எஸ்.எம்.எஸ். செய்தால் உங்களைத் தேடி வரும் ஆட்டோ
By dn | Published On : 05th October 2013 04:50 AM | Last Updated : 05th October 2013 04:50 AM | அ+அ அ- |

"கால்-டாக்ஸி' சேவையைப் போல், "எஸ்.எம்.எஸ். ஆட்டோ' சேவையும் சென்னையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
பெயர், முகவரியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும், ஆட்டோ உங்களைத் தேடி வந்துவிடும்.
"பார்ட்னர் ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டம் வரும் 14-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். சேகர் சென்னையில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான ஆட்டோ சேவையை அளிக்கும் வகையில் இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் மீட்டர் கட்டணத்துடன், கூடுதலாக சேவைக் கட்டணமாக ரூ. 10 செலுத்தவேண்டும். இதற்கு மேல் கூடுதலாக எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
பதிவு செய்து, மீட்டர் பொருத்தியுள்ள அனைத்து ஆட்டோக்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து தொடர்ச்சியான சவாரியைப் பெற முடியும்.
சிஐடியு, ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கங்கள் இந்தத் திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னையில் இயங்கி வரும் 70,000 ஆட்டோக்களில் இதுவரை 5,000 ஆட்டோக்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளன. படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்த்தப்படும்.
முதல்கட்டமாக சென்னையிலும், பின்னர் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
எப்படி பயன்படுத்துவது?
இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பும் பயணிகள் முதல் முறை மட்டும் 044 - 4555 4666 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவ்வாறு அழைக்கும் வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ். செய்வதற்கான எண் வழங்கப்படுவதோடு, எவ்வாறு இந்தச் சேவையைப் பயன்படுத்தவது என்ற விவரமும் தெரிவிக்கப்படும்.
பின்னர் தேவைப்படும்போது, கால் - சென்ட்டர் மூலம் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு தாங்கள் இருக்கும் இடத்துக்கான அஞ்சல் குறியீóட்டு எண்ணை எஸ்.எம்.எஸ். செய்தால், மூன்று முதல் ஐந்து ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் ஏதாவது ஒரு ஓட்டுநரை தேர்வு செய்து, அவர்களோடு நேரடியாக தொலைபேசியில் பேசி இருக்கும் இடத்துக்கே வரவழைத்து பயணம் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.