கேட்பாரற்றுக் கிடக்கும் அம்பத்தூர் உழவர் சந்தை!

அம்பத்தூரில் கட்டப்பட்ட உழவர் சந்தை தற்போது கேட்பாரற்றும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது.

அம்பத்தூரில் கட்டப்பட்ட உழவர் சந்தை தற்போது கேட்பாரற்றும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது.

அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சி.டி.எச். சாலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு ரூ.14 லட்சத்தில் உழவர் சந்தை கட்டப்பட்டது.

87 சென்ட் பரப்பில், மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.

உழவர் சந்தையின் அருகே குடியிருப்புகள் இல்லை. பேருந்து நிறுத்தம் இல்லை. ஆதலால் உழவர் சந்தை தொடங்கப்பட்டபோதே விவசாயிகளும், பொதுமக்களும் இங்கு வர மறுத்தனர். இதையடுத்து உழவர் சந்தை முன்பு பேருந்துகள் நின்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. விவசாயிகள் காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வருவதற்கு கட்டணமில்லாப் பேருந்து வசதி செய்து கொடுத்து விவசாயிகளை அழைத்து வந்தனர்.

அதன்பிறகு கவனிக்கப்படாமல் கேட்பாரற்று போனது. தற்போது உழவர் சந்தையின் கட்டடம், போருக்குப் பிறகு சிதிலமடைந்த பழையக் கோட்டை போல் காட்சி தருகிறது.

இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் நிறுத்துமிடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது. தற்போது பகலில் உழவர் சந்தை தேநீர் கடையாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரி கூறுகையில்,

உழவர் சந்தை இயங்கியபோது ஆவின் பாலகம் செயல்பட்டு வந்தது. தற்போது வியாபாரம் இல்லாததால் கட்டடம் பயன்பாடின்றி உள்ளதால் டீக்கடை வைத்துள்ளனர் என்றார்.

அம்பத்தூரில் இதேபோல் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன. அவற்றைக் கண்டெடுத்து, அம்பத்தூரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு இடம் கொடுத்து அவற்றை சொந்த இடத்தில் இயங்க வைக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சமீப காலத்தில் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் அம்பத்தூருக்கு, தினமும் 1 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இங்கிருந்து தூத்துக்குடி, காரைக்குடிக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் அம்பத்தூருக்கு என தனியாக பேருந்து நிலையமே இல்லை. அம்பத்தூர் ஓ.டி.யில் சாலையின் ஓரத்தில் எந்தவித மேற்கூரையும் இல்லாத இடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.

பேருந்து நடத்துநர்களும், ஓட்டுநர்களும் இயற்கை உபாதையை கழிக்க பெரும் சிரமப்படுகின்றனர்.

ஆகவே பயன்படாமல் உள்ள உழவர் சந்தை இடத்தையும், அதையொட்டியுள்ள ஓர் ஏக்கர் காலி இடத்தையும் ஒருங்கிணைத்து அம்பத்தூர் பேருந்து நிலையம் உருவாக்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com