தனியார் தொலைத்தொடர்பு ப்ரீ-பெய்டு கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்கள் புகார்
By dn | Published On : 21st May 2014 04:08 AM | Last Updated : 21st May 2014 04:08 AM | அ+அ அ- |

மொபைல் ப்ரீ-பெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தை எந்த விதமான முன்னறிவிப்புமின்றி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புதிய கட்டணம் கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு, ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 1 கோடியே 19 லட்சம் பேர் மொபைல் போன்களை உபயோகிக்கின்றனர். அதில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்கள்.
ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன் உள்ளிட்ட முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ப்ரீ-பெய்டு சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 88 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர்.
12 சதவீதத்துக்கும் குறைவான வாடிக்கையாளர்கள் மட்டுமே பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். மொபைல் சேவையைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக மொபைல் சேவையில் கட்டணங்கள் மற்றும் திட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பது தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) விதிகளில் ஒன்று.
ஆனால் பெரும்பாலான தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த விதியை பின்பற்றுவதில்லை என்பது வாடிக்கையாளர்களின் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த 1- ஆம் தேதி முதல் தனியார் தொலை தொடர்பு சேவையில் டேட்டா பேக், ரேட் கட்டர், பூஸ்டர் பேக் உள்ளிட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.10 லிருந்து ரூ.60 வரை ப்ரீ-பெய்டு திட்டங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதைத் தவிர ஒரு சில திட்டங்களில் அழைப்புகளுக்கான கால அளவு (கால் டைம்) குறைக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான முன்னறிவிப்பின்றி புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்களுக்கும், ரீ சார்ஜ் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுவதாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
டிராய் விதிகளின்படி, சேவைகளில் செய்யப்படும் மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்து வருகிறோம். அனைத்து மாற்றங்களையும் அனைவருக்கும் அனுப்ப இயலாது. எனவே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் எந்த திட்டத்தைப் பயன்படுத்துகிறாரோ, அதில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை மட்டும் அவர்களுக்குத் தெரிவிப்போம்.
ஒரு வேளை ப்ரீ-பெய்டு திட்டங்களின் கட்டண உயர்வு குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தகவல் வரவில்லையெனில், அது குறித்த புகாரை நாங்கள் பதிவு செய்வோம் என்றார் அவர்.