பயணி தவறவிட்ட 30 பவுன் நகைகள்: மீட்டுத் தந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு
By DN | Published On : 04th November 2014 04:51 AM | Last Updated : 04th November 2014 04:51 AM | அ+அ அ- |

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகளை மீட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருமங்கலம் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் பாமா (45). இவர், தேனியிலிருந்து பேருந்து மூலம் சென்னைக்கு திங்கள்கிழமை வந்தார். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோவில் ஏற முயன்றார். அப்போது, மற்றொரு ஆட்டோவில் ஏறிய அவர், தனது கைப் பையை அந்த ஆட்டோவிலேயே மறதியாக வைத்துவிட்டு, மீதிப் பொருள்களுடன் அடுத்த ஆட்டோவில் ஏறிச் சென்றார்.
சிறிது நேரத்துக்குப் பின்னர், பையை தவறவிட்டிருப்பதை பாமா அறிந்தார். இதையடுத்து அவர், உடனடியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதற்கிடையே, பேருந்து நிலையத்தின் ஆட்டோ ஓட்டுநர் பி.சீனிவாசன் (49), தனது ஆட்டோவில் ஒரு பெண் பையை தவறிவிட்டுச் சென்றதாக, அந்தப் பையை போலீஸாரிடம் கொடுத்தார். போலீஸார் அதை சோதனை செய்ததில் அது பாமாவுடையது என்பதும், 30 பவுன் நகைகள் அதில் அப்படியே இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அந்தப் பையை பாமாவிடம் ஒப்படைத்தனர். மேலும், 30 பவுன் நகைகளுடன் பையை மீட்டு நேர்மையாக போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசனை, கூடுதல் ஆணையர் கருணாசாகர், உதவி ஆணையர் மோகன்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.
மேலும், அவருக்கு சென்னை பெருநகரக் காவல் றை சார்பில் வெகுமதி அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிறப்பாகச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார், காவலர்கள் கோபிநாத், பாலமுருகன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.