தண்ணீரின்றிக் கருகும் செடிகள்: சென்னைப் பூங்காக்களின் அவல நிலை

பெங்களூரின் அழகு அங்கு அதிக அளவில் உள்ள பூங்காக்களே. பூங்காக்கள் நகரத்தின் அழகு மட்டுமல்ல, நகரத்து நெருக்கடியில் நசுங்கும் மக்களின் இளைப்பாறுதலுக்கான வேடங்தாங்கல். ஆனால், சென்னை நகரிலுள்ள பூங்காக்கள் எந்த நிலையில் உள்ளன என்று பார்த்தால் கவலையே மிகுகிறது.
Updated on
1 min read

பெங்களூரின் அழகு அங்கு அதிக அளவில் உள்ள பூங்காக்களே. பூங்காக்கள் நகரத்தின் அழகு மட்டுமல்ல, நகரத்து நெருக்கடியில் நசுங்கும் மக்களின் இளைப்பாறுதலுக்கான வேடங்தாங்கல். ஆனால், சென்னை நகரிலுள்ள பூங்காக்கள் எந்த நிலையில் உள்ளன என்று பார்த்தால் கவலையே மிகுகிறது.

சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் 54 பூங்காக்கள் உள்ளன. இந்தப் பூங்காக்களை உருவாக்கும்போது இருந்த ஆர்வம் பராமரிப்பதில் இல்லை. இதனால் பூங்காவில் உள்ள செடி, கொடிகள் சருகாய்க் காய்ந்து கிடக்கின்றன. கவனிக்க ஆளில்லாததால், குழந்தைகள் விளையாடும் சறுக்குமரம், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டுச் சாதனங்கள் உடைந்து கிடக்கின்றன.

சமீபகாலமாக, காலை நேரங்களில் நடைப் பயிற்சி செல்ல அதிக அளவில் பூங்காக்களுக்கு மக்கள் வருகின்றனர். தற்போது சென்னையில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது. இதனால் மாலையில் இளைப்பாற குழந்தைகளுடன் பூங்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஆனால், எந்தப் பூங்காவிலும் தண்ணீர் வசதி இல்லை; குடிநீர் வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அயப்பாக்கம், காவேரி தெருவில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி முழுவதும் குப்பைக் கூளமாகக் காணப்படுகிறது. பூங்காவின் பிரதானக் கதவுகள் உடைந்து கிடக்கின்றன. இங்குள்ள குழந்தைகளின் விளையாட்டுச் சாதனங்கள் பயன்படுத்தத் தகுதியற்ற நிலையில் உடைந்து வீணாகியுள்ளன.

முகப்பேர் மேற்கில் உள்ள பூங்காவில் இரவு நேரங்களில் நடைபாதைக் கடைக்காரர்கள் தள்ளுவண்டிகளையும், பாத்திரங்களையும் பூங்காவில் வைக்கின்றனர். இதனால் பூங்காவுக்கு வரும் மக்கள் அசெüகரியமாக உணர்கின்றனர். தவிர, காவலாளி இல்லாததால் இரவு நேரங்களில் குடிகாரர்களும் சமூக விரோதிகளும் இந்தப் பூங்காவை ஆக்கிரமிக்கின்றனர்.

இதுகுறித்து தனது பேரக் குழந்தைகளுடன் பூங்காவுக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் சகோதரர் வெள்ளையன் கூறியது:

சென்னை மாநகராட்சிப் பூங்காக்கள்

பராமரிப்பு இல்லாததால், செடிகள் காய்ந்து கிடக்கின்றன. பூங்காவில் நாய்த் தொல்லையும் அதிகமாக உள்ளது. முதல்கட்டமாக இங்குள்ள செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும் என்றார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி 7-வது மண்டல அலுவலர் முருகன் கூறியது:

மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள பூங்காக்களுக்கு சீருடையுடன் காவலாளிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

பூங்காவை சுத்தம் செய்ய துப்புரவுப் பணியாளர்களையும் நியமிக்க உள்ளோம். சென்னை குடிநீர் வாரியத்துடன் ஆலோசித்து, பூங்காக்களுக்கு தினமும் கூடுதலாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

பாராட்டத்தக்க முயற்சி!

முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்தில் உள்ள சென்னை மாநகராட்சிப் பூங்காவில் காலையில் அனைத்து தமிழ், ஆங்கில நாளேடுகளை இப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் பி.வி.தமிழ்ச்செல்வன் தனது சொந்தச் செலவில் வழங்கி வருகிறார்.

இதனால், நடைப் பயிற்சி முடித்து இளைப்பாறுபவர் கள் நாட்டுநடப்பைத் தெரிந்து கொள்கிறார்கள். இதேபோல, பிற மாமன்ற உறுப்பினர்களும் செய்யலாமே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com