

சென்னையில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு செல்லிடப்பேசி செயலி (ஹல்ல்ள்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாகவே நடைபெறுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. அதற்கு ஏற்றார்போல கடந்த 2014ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றம் மாநிலத்தில் 1.3 சதவீதம் குறைந்துள்ளது.
மாநிலத்தில் கடந்தாண்டு பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக மொத்தம் 6,826 வழக்குகள் பதியப்பட்டன. இதில் பாலியல் பலாத்கார வழக்குகள் 471, பாலியல் தொந்தரவு வழக்குகள் 1,102, கடத்தல் வழக்குகள் 1,479, வரதட்சணை கொடுமை வழக்கு 95, கணவர், குடும்பத்தினரால் தாக்கப்பட்ட வழக்குகள் 2,103, வரதட்சணை கொடுமை வழக்கு 292 ஆகியவை அடங்கும்.
கடந்த 2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், 2014ஆம் ஆண்டு முதல் குறையத் தொடங்கியுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும், காவல்துறையின் தீவிர நடவடிக்கையுமே காரணமாகக் கூறப்படுகிறது.
சிறுசேரி கொலைச் சம்பவம்: சென்னை அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்த உமா மகேஸ்வரி கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் தனியார் மென்பொருள் நிறுவனங்கள், பெண் ஊழியர்கள் பாதுகாப்பு விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன. குறிப்பாக அந்த நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு தங்களது வளாகத்துக்குள் மட்டுமன்றி, அவர்கள் அலுவலகத்தில் இருந்து வீடு செல்லும் வரை பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
உதாரணமாக, மாலை 6 மணிக்கு மேல் பெண் ஊழியர்களை தனியாக வளாகத்தைவிட்டு வெளியே செல்ல மென்பொருள் நிறுவனம் அனுமதிப்பதில்லை. மேலும் மாலை 6 மணிக்கு மேல் பெண் ஊழியர்களை, பாதுகாவலரோடு அவர்கள் வீடுகளுக்கு அனுப்புகிறது.
செல்லிடப்பேசி செயலி அறிமுகம்: இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் செல்லிடப்பேசி செயலியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை பெண் ஊழியர்கள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய அந்த நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. இந்த செயலி பெண்கள் பாதுகாப்புக்காக 3 வகைகளாக எச்சரிக்கை செய்திகளை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியில் "அலர்ட்' என்ற பொத்தானை பெண் ஊழியர் அழுத்தியதும், சம்பந்தப்பட்ட பெண் ஊழியருக்கு நன்கு நெருக்கமான 5 பேருக்கு உடனடியாக குறுஞ்செய்தி செல்லும், அடுத்ததாக 5 பேரின் இ-மெயிலுக்கு மின்னஞ்சல் செல்லும், அடுத்தப்படியாக ஒரு தொலைபேசி எண்ணுக்கு அந்த பெண்ணின் செல்லிடப்பேசியில் இருந்து அழைப்புச் செல்லும், எதிர்முனையில் இருக்கிறவர் அந்த அழைப்பை ஏற்று பேசும்போது ஏற்கனவே அந்த செயலியில் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் கணினி குரல் சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் அபாய சூழ்நிலையில் இருப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டிக்கும்.
இதற்காக அந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே, 5 செல்லிடப்பேசி எண்கள், 5 மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பெண் ஊழியரிடம் பெற்ற பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் அந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலிக்கு அந்த குறிப்பிட்ட மென்பொருள் நிறுவன பெண் ஊழியர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைப் பார்த்த மற்றொரு மென்பொருள் நிறுவனமும், பெண் ஊழியருக்காக செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண் ஊழியர்களின் பாதுகாப்பு என்பது காவல்துறையை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது என மென்பொருள் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
இதைப் போல பிற தனியார் நிறுவனங்களும் தங்களது பெண் ஊழியர்களுக்கு செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், காவல் துறையும் பெண்களுக்கென தனியாக இதைவிட மேம்படுத்தப்பட்ட செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.