சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் மான் கொம்பு, ஆமை ஓடுமத்திய அரசின் தடையால் மருந்து தயாரிப்பு பாதிப்பு

சித்த மருத்துவத்தில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் மான் கொம்பு, ஆமை ஓடு உள்ளிட்ட பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் மருந்து தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் மான் கொம்பு, ஆமை ஓடுமத்திய அரசின் தடையால் மருந்து தயாரிப்பு பாதிப்பு
Published on
Updated on
2 min read

சித்த மருத்துவத்தில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் மான் கொம்பு, ஆமை ஓடு உள்ளிட்ட பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் மருந்து தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தைப் பொருத்தவரை மிதமான பாதிப்புகளுக்குப் பெரும்பாலும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. தீவிரமான பாதிப்புகளுக்கும், மூலிகை மருந்துகளால் தீர்வு ஏற்படாத நோய்களுக்கும் விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பொருள்களால் தயாரிக்கப்படும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இவற்றுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதனால் மருந்துகள் தயாரிப்பு பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட சித்த மருந்துகள் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னென்ன பொருள்கள்?: மான் கொம்பு, ஆமை ஓடு, யானைத் தந்தம், புலிப்பல், மனித மண்டை ஓடு, நண்டுக் கல், கஞ்சா, அபின் உள்ளிட்ட பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பயன் என்ன?: மான் கொம்பின் மூலம் இருதய நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்தன. கடலில் உள்ள நண்டுகள் அங்குள்ள பாறைகளில் உறைந்து படிமமாக மாறும். அவை நண்டுக் கல் என்று அழைக்கப்படுகின்றன. இதன் மூலம் தயாரிக்கப்படும் மருந்து சிறுநீரக நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.

வயிற்றுப்போக்குக்கு ஆமை ஓட்டினால் தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. மனித மண்டை ஓட்டின் மூலம் உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு மருந்து தயாரிக்கப்பட்டு வந்தது. யானைத் தந்தம் வெளிப்புற பாதிப்புகளுக்கு கொடுக்கும் மருந்துகளில் சேர்க்கப்பட்டு வந்தது.

சேகரிப்பு: காடுகளில் மூலிகைகளைச் சேகரிப்பவர்களைப் போன்று, மான் கொம்பு, யானைத் தந்தம், புலிப்பல் போன்றவற்றையும் மலைவாழ் பகுதி மக்கள், கிராமப்புற மக்கள் தொழிலாகச் செய்து வந்தனர். காடுகளில் விலங்குகள் தானாகவே உடைத்துப் போட்டவை அல்லது காடுகளில் இறக்கும் விலங்குகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வந்தது.

அதே போன்று நண்டுக்கல் உள்ளிட்டவற்றை மீன்பிடித் தொழிலில் இருப்பவர்கள் சேகரித்தனர். இவை அனைத்தும் சித்த மருத்துவ மருந்துகளைத் தயாரிக்கும் மூலப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

சித்த மருத்துவர்கள் தங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களைப் பெற்று அந்த மருந்துகளைத் தயார் செய்து வந்தனர். இந்நிலையில் இந்தப் பொருள்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறியது:

குறிப்பிட்ட மூலப்பொருள்களின் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள் இப்போது தயாரிக்க முடியாத நிலை உள்ளது. அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள் சிறந்த பயனைக் கொடுத்து வந்தது.

விலங்குகளிடம் இருந்து பெறும் பொருள்களை வனத்துறையினர் மூலம் சேகரிக்கச் செய்து, தமிழக அரசின் மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகை மருத்துவ நிறுவனம் (டாம்ப்கால்) மூலம் அவற்றை விற்பனைக்கு அளிக்கலாம்.

மேலும் நிபுணர்கள் குழு அமைத்து இந்தப் பொருள்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் பயன் என்ன என்பதை ஆராய்ந்து, இந்தப் பொருள்களின் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தமிழக சித்த மருத்துவர்கள் மத்திய அரசின் ஆயுஷ் குழுவிடம் அண்மையில் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com