வெள்ள மீட்புப் பணியில் கடலோரப் பாதுகாப்புப் படை வீரர்கள்!

வெள்ள மீட்புப் பணியில், கடலோர பாதுகாப்புப் படை வீரர்கள் முதல் முறையாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில்,
வெள்ள மீட்புப் பணியில் கடலோரப் பாதுகாப்புப் படை வீரர்கள்!
Updated on
2 min read

வெள்ள மீட்புப் பணியில், கடலோர பாதுகாப்புப் படை வீரர்கள் முதல் முறையாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில், வெள்ளத்தில் சிக்கிய 25 பேரை இவர்கள் மீட்டுள்ளனர்.
 கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு இல்லாத வட கிழக்கு பருவமழை, இந்தாண்டு தொடக்கம் முதல் நன்றாக பெய்து வருகிறது. இதனால், அணைகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
 இந்த நிலையில், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடந்த ஒரு வாரமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், வெள்ளத்தில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.
 முதல்முறையாக மீட்புப் பணியில்..: உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்துவருகிறது.
 வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்க, முதல்முறையாக தமிழக கடலோரப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். நாட்டில் வேறுஎங்கும் இவர்கள் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என போலீஸôர் தெரிவித்தனர்.
 மீட்புப் பணியில் 30 வீரர்களும், 500 மீனவர்களும்..: இந்தப் படையில் உள்ள முழு உடல் தகுதியுடன் இருந்த 30 வீரர்களுக்கு வெள்ளம், புயல், சூறாவளிக் காற்று உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீட்பது உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் கடந்தாண்டு அளிக்கப்பட்டன.
 புணேயைச் சேர்ந்த ஒரு நீச்சல் பயிற்சி நிறுவனம், கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திய உயிர் பாதுகாப்பு இயக்கம் ஆகியன இந்தப் பயிற்சியை அளித்தன. "உயிர்காக்கும் கமாண்டோ வீரர்கள்' என பெயரிடப்பட்டுள்ள இந்த வீரர்களே இப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு முழு அளவில் பயன்படுத்தப்பட்டனர்.
 இதுதவிர, இந்தப் படையின் ஒரு அங்கமாக கடலோர ஊர்க்காவல் படை வீரர்களாகச் சேர்க்கப்பட்ட 500 மீனவர்களுக்கும் இயற்கை பேரிடர் காலங்களில் செயல்படுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 நீச்சலில் ஆழ்ந்த அனுபமுள்ள இவர்கள், 13 கடலோர மாவட்டங்களிலும் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 30 வீரர்களும், 500 மீனவர்களும் வருவாய், காவல் துறைகளின் கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பிலேயே மீட்புப் பணிக்காக காத்துள்ளனர்.
 25 பேரும், கால்நடைகளும். உடைமைகளும் மீட்பு: இந்தப் படையினர் இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 25 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 60 கால்நடைகள் உயிருடனும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உடைமைகளையும் கூட இவர்களால் மீட்கப்பட்டுள்ளன.
 வெள்ள மீட்புப் பணிக்கு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினரையும், மத்தியப் பேரிடர் மீட்புக் குழுவினர் இதுவரை ஈடுபட்டு வந்தனர்.
 இப்போது கடலோரப் பாதுகாப்புப் படை வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவது சிறப்புடையதாக இருக்கிறது என்று அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.
 "நவீன கருவிகளால் மீட்புப் பணி எளிதாகிறது'
 கடலோரங்களில் ரோந்து, தீவிரவாத ஊடுருவல் தடுப்பு, கண்காணிப்பு, கடத்தல் தடுப்பு உள்ளிட்ட பணிகளில் கடலோரப் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். இப்போதுதான் முதல் முறையாக வெள்ள மீட்புப் பணியில் ஈடுபடுவதாக ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
 கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டதில் தங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 நவீன கருவிகள் இருப்பதால், மீட்புப் பணியில் எளிதில் ஈடுபட முடிகிறது என்று படை வீரர்கள் கூறுகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com