சுமார் 15 ஆயிரம் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் அடங்கிய செல்லிடப்பேசி செயலியை (ஹல்ல்ள்) சென்னை பெருநகரக் காவல் துறை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
சென்னையில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் தொடர்ச்சியாக கொலை, கொள்ளை, வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது, சிறு திருட்டில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடுகிறவர்களின் விவரங்களை காவல் துறை கடந்த 3 மாதங்களாகச் சேகரித்தது.
முக்கியமாக, இவர்கள் வசிக்கும் வீடு நகரின் ஒரு புறத்திலும், இவர்கள் மீதான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலையங்கள் நகரின் மற்றொரு புறத்திலும் இருப்பதால், குற்றவாளிகளைக் கண்காணிப்பதிலும், அவர்களைப் பின்தொடர்வதிலும் போலீஸாருக்கு பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இதேபோல, சமூக விரோதிகள் காவல் துறையினரின் கண்காணிப்பில் இருந்து தப்பித்து, நகரின் வேறு பகுதிகளில் தலைமறைவாக வசிக்கின்றனர்.
இதையடுத்து, குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், குற்றவாளிகளைத் தீவிரக் கண்காணிப்பில் வைப்பதற்கும் புதிய திட்டத்தை தயாரிக்க சென்னை பெருநகரக் காவல் ஆணையர் எஸ். ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, காவல் துறை நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் மணி தலைமையில் போலீஸார் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முதலாவதாக, குற்றவாளிகள் மீதான வழக்குகள் குறித்த தகவல்களையும், அவர்கள் இப்போது வசிக்கும் முகவரிகளையும் போலீஸார் சேகரித்தனர்.
மேலும், குற்றவாளிகள் தங்கியிருக்கும் வீட்டின் அருகே உள்ள காவல் நிலைய போலீஸாரே அவர்களைக் கண்காணிக்கும் புதிய திட்டத்தை காவல் துறை உயர் அதிகாரிகள் வகுத்துள்ளனர். அதன்படி, சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது, சிறு திருட்டு ஆகியவற்றில் கடந்த 2012-இல் இருந்து தொடர்ச்சியாக ஈடுபட்ட 14,551 குற்றவாளிகள் அடங்கிய பட்டியலை காவல் துறையினர் தயார் செய்துள்ளனர். இவர்களில் 11,303 பேர் சென்னையில் இருப்பதும், எஞ்சிய 3,248 பேர் சென்னைக்கு வெளியே இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைக்குள் இருக்கும் குற்றவாளிகளின் முகவரிகளை அந்தந்தக் காவல் நிலையத்துக்கு, கட்டுப்பாட்டு அறை போலீஸார் அனுப்பியுள்ளனர். அந்த முகவரிகளில் குற்றவாளிகள் இருப்பதை போலீஸார் உறுதி செய்து கொண்டு, அவர்களைத் தொடர் கண்காணிப்பிலேயே கடந்த ஒரு மாதமாக வைத்துள்ளனர்.
54 சதவீத குற்றங்கள் குறைவு: இதன் காரணமாக, சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் குற்றங்கள் 54 சதவீதமாகக் குறைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 384 குற்ற வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், நவம்பர் மாதம் இது குறைந்து 209 வழக்குகளே பதிவாகியிருக்கின்றன. குற்றங்கள் சுமார் 54 சதவீதம் அளவுக்குக் குறைந்திருக்கின்றன. குற்றவாளிகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதாலேயே குற்றங்கள் குறைந்துள்ளதாக சென்னை காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குற்றவாளிகளை மேலும் தீவிரமாகக் கண்காணிப்பதற்காக தனியார் வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வீடுகள், கடைகள், சங்கங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.
இதேபோல, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள், குற்றங்களைச் செய்துவிட்டு பதுங்கி வாழுபவர்கள் ஆகியோரையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
செல்லிடப்பேசி செயலி: குற்றவாளிகளுக்கு எதிரான மீதான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், சுமார் 15 ஆயிரம் குற்றவாளிகளின் தகவல்கள் அடங்கிய செல்லிடப்பேசி செயலியை சென்னை பெருநகரக் காவல் துறை விரைவில் வெளியிட உள்ளது. இந்தச் செயலியை வடிவமைக்கும் பணியில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் செயலியை சென்னை போலீஸார் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மேலும், இது ரோந்துப் பணியில் இருக்கும் போலீஸார், மேற்பார்வையிடும் அதிகாரி, சிறப்பு உதவி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், உதவி ஆணையர், துணை ஆணையர், இணை ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகியோர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது.
குற்றவாளிகளின் பெயர்கள், அவர்களது முகவரிகள், குற்றங்களின் வகை, வயது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு குற்றவாளியை எளிதாக அடையாளம் காண்பதற்காகவும், அவர்களது இப்போதைய நிலைமை குறித்த தகவலை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கும், அவர்கள் காவல் துறை கண்காணிப்பில் இருந்து எளிதில் விடுபடாமல் இருப்பதற்கும் இந்தச் செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்த உள்ளதாக சென்னை காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தச் செயலியை ஒரு மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
குற்றவாளிகளின் எண்ணிக்கை
சென்னையில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு நவம்பர் வரை பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை:
குற்றங்களின் குற்றவாளிகள்
வகைகள்
கொலை 1358
ஆதாயக் கொலை 76
கொள்ளை 1631
வீடுகளில் பகலில்
திருட்டு 522
வீடுகளில் இரவில்
திருட்டு 1610
நகை பறிப்பு 1799
திருட்டு 3802
பணப்பை திருட்டு 968
வாகனத் திருட்டு 1276
மோசடி வழக்கு 1509
மொத்தம் 14551
குறையும் குற்றங்கள்
குற்றம் அக்டோபர் நவம்பர்
கொலை 13 5
ஆதாயக் கொலை 1 1
கொள்ளை 11 4
வீட்டு பூட்டை
உடைத்து திருட்டு 27 4
வீடுகளில் பகலில்
திருட்டு 41 17
நகை பறிப்பு 61 39
வாகனத் திருட்டு 122 69
பணப்பை திருட்டு 12 16
பிற திருட்டுகள் 93 53
மொத்தம் 384 209
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.