வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தங்கள் வீட்டுக் குழந்தைகளாக பராமரிப்பதாக பூங்காவில் பணிபுரியும் காப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டபோது, தினப் பணியாளர்களாக வேலைக்கு வந்தவர்கள், பின்பு முறையான பயிற்சிகள் மூலம் விலங்குகள் காப்பாளர்களாக உயர்ந்துள்ளனர். இவர்கள் குரங்குகள் முதல் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளைப் பராமரிக்கின்றனர்.
ஊழியர்களிடம் வனவிலங்குகளின் தன்மை, பணி அனுபவம் குறித்து கேட்டோம்.
திட்டிவிட்டால் சாப்பிட மறுக்கும் இரு மனித குரங்குகள்: சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள கொம்பி, கௌரி என்ற இரு மனிதக் குரங்குகளையும் பராமரித்து வரும் பணியாளர்கள் ஏகாம்பரம், என்.அன்னம்மாள் ஆகியோர் கூறியதாவது:
தினசரி 3 வேளையும் பால், முட்டை, காய்கறிகளை உணவாக இந்த மனிதக் குரங்குகள் சாப்பிடுகின்றன. 50 முதல் 60 ஆண்டு வரை உயிர்வாழக் கூடியவை. எளிதில் பழகிவிடும். சொல்வதையும் எளிதில் புரிந்துகொள்ளும். பெயரிட்டு எப்போது அழைத்தாலும் உடனே வந்துவிடும். இவை மனிதனுடன் எளிதாக பழகக் கூடியதென்பதால், இவற்றுக்கு அதிக கண்காணிப்பும் தேவையாகிறது.
திட்டினாலும், கிண்டல் கேலி செய்தாலும் புரிந்துகொள்வார்கள். அன்பு அதிகம் தேவைப்படும் ஜீவன்கள். திட்டிவிட்டால் அடுத்த முறை பெயரிட்டு அழைத்தாலும் அவை நம்மிடம் வராது, உணவை உண்ணாது. எனவே, நம் வீட்டில் உள்ள குழந்தைகளைப்போல கருதி இவற்றைப் பராமரிக்கிறோம் என்றனர்.
ஒட்டகங்களான "ரகுமானு'க்கு "ஆயிஷா' பாதுகாப்பு: கொல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 அடி உயரம் கொண்ட ரகுமான், ஆயிஷாவும் ஒட்டகச் சிவிங்கிகள். இவற்றை பராமரிக்கும் பணியாளர் பழனி கூறியதாவது:
ரகுமானுக்கு 29 வயதும், ஆயிஷாவுக்கு 32 வயதும் ஆகிறது. இவை தினமும் இரண்டு வேளை பீன்ஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பழங்களும், காய்கறிகளும் உண்கின்றன.
ஒன்றோடு ஒன்று மிகவும் பாசமானது. ஆயிஷாவைக் கூப்பிட்டால் முதலில் ரகுமான்தான் வரும். அதன் பின்புதான் ஆயிஷா வரும். அந்தளவுக்கு தனது ஜோடியை இந்த ஜீவராசி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும். மிகவும் சாதுவான மிருகம் என்பதால் பழகுவதற்கு எளிதானது என்றார்.
"வீட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், பூங்காவில் வந்து விலங்குகளைப் பார்க்கும்போது மன நிம்மதி அடைந்துவிடும்' என்கிறார் பழனி.
தாயைப் பிரிந்த யானைகள்: வண்டலூரில் வளர்க்கப்படும் கிரி (8), உரியன் (6), அசோக் (7) ஆகிய மூன்று யானைகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டவை. இவற்றை பராமரிக்கும் டாப்ஸ்லிப் வனப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர்களான மாரியப்பன், பொம்மன், ரமேஷ் ஆகியோருக்கு யானைகளின் பாஷைகள் புரியும். யானை வளர்ப்பில் தேர்ந்தவர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
யானைகள் தினமும் 200 முதல் 300 கிலோ புற்களை உணவாக சாப்பிடுகின்றன. அரிசி, கம்பு, ராகி ஆகியவற்றைச் சமைத்து கவலமாகக் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டிய விலங்கு என்பதால் பூங்காவிலேயே தங்கியிருக்கிறோம் என்றோம்.
குரலுக்கு அடிபணியும் சீறும் சிங்கங்கள்: பூங்காவில் வீரா, ஜான்சி, சங்கர், மாலா, நீலா என்ற சிங்கங்களை ஒற்றை ஆளாக பராமரித்துவரும் கே.சம்பத் கூறியதாவது:
கூப்பிட்ட குரலுக்கு வீராவும், ஜான்சியும் ஓடோடி வரும். சிங்கத்தைப் பராமரிக்கச் சொன்னபோது, முதலில் பயமாக இருந்தது. அவற்றுடன் பழகியவுடன் கேட்கக் கூடியதாக மாற்றிவிட்டேன். காலையில் முதலில் வந்தவுடன் சிங்கம் உலாவும் பகுதியை முழுமையாகப் பார்வையிட வேண்டும், பார்வையாளர்கள் பாட்டில் கள், பிளாஸ்டிக் பைகள் போட்டிருந்தால் அவற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். பின்பு, கூண்டுக்குச் சென்று சிங்கங்கள் முழுமையாக இறைச்சியைச் சாப்பிட்டதா என்பதைக் கவனிக்க வேண்டும். சிங்கம் சோர்வாக இருந்தால் உடனடியாக மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். சிங்கங்கள் எப்போதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து பூங்காவின் பயாலாஜிஸ்ட் மணிமொழி கூறியது:
நாள் ஒன்றுக்கு ஒரு சிங்கத்துக்கு 7 கிலோ இறைச்சி போடப்படுகிறது, அவ்வப்போது கோழிக் கறியும், 150 கிராம் ஈரலும் கொடுக்கப்படுகிறது. அசைவ உணவு சாப்பிடும் மிருகங்களின் வயிறு வாரம் ஒரு நாள் காலியாக இருக்க வேண்டும்.
அதனால் பூங்கா விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை வெறும் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படும். பூங்காவில் உள்ள அனைத்து அடைப்பிடங்களும் தினமும் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்படும். இது நோய்த் தொற்று பரவாமல் தடுக்கப்படுவற்கான முயற்சியாகும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


