முயல் பண்ணையால் புழல் கைதிகளிடம் புதிய நம்பிக்கை

சென்னை புழல் பெண்கள் தனிச் சிறையில் தொடங்கப்பட்ட முயல் பண்ணையானது கைதிகளிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
Updated on
2 min read

சென்னை புழல் பெண்கள் தனிச் சிறையில் தொடங்கப்பட்ட முயல் பண்ணையானது கைதிகளிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்தப் பண்ணையை விரிவுபடுத்த சிறைத் துறை திட்டமிட்டுள்ளது.
 தமிழகத்தில் பெண்களுக்கென உள்ள 14 சிறைகளில் சுமார் 600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புழல், திருச்சி, வேலூர் ஆகிய 3 இடங்களில் உள்ள பெண்கள் தனிச் சிறைகளில் தண்டனைக் கைதிகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளனர். புழல் பெண்கள் தனிச் சிறையில் சுமார் 80 தண்டனைக் கைதிகள் இருக்கின்றனர்.
 இந்தக் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில், சிறைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக, சிறையில் கைதிகளுக்கு சிறு தொழில்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
 இதன் மூலம் கைதிகள் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்வதோடு, அவர்களால் வருவாயும் ஈட்ட முடிகிறது. மேலும், அவர்கள் சிறையைவிட்டு வெளியே செல்லும்போது, தாங்கள் கற்றுக் கொண்ட தொழில் மூலம் புதிய வாழ்க்கையையும் தொடங்குகின்றனர்.
 குறையும் தண்டனை: வேலையில் ஆர்வமுடன் ஈடுபடும் கைதிகளுக்கு ஆண்டுக்கு 48 நாள்கள் வரை தண்டனை குறைக்கப்படுகிறது.
 இந்தத் தண்டனைக் குறைப்பு நல்லொழுக்கம், பணியில் ஆர்வம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. மொத்தக் கைதிகளில் 50- 60 சதவீதத்தினர் தண்டனைக் குறைப்பு மூலம் பயன் பெறுகின்றனர் என சிறைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
 ஆயத்த ஆடை தயாரித்தல், கைத்தறி, விசைத்தறி, புத்தகம் பைண்டிங், காலணி செய்தல், கயிறு செய்தல், பேக்கரி சார்ந்த உணவுப் பொருள்கள் தயாரித்தல், பினாயில் தயாரிப்பு, அட்டை தயாரிப்பு, பேண்டேஜ் துணி உற்பத்தி, சீருடைகள் தயாரிப்பு, பாத்திரங்கள் உற்பத்தி, அல்வா, மிக்ஸர் உள்ளிட்ட நொறுக்குத்தீனி தயாரித்தல் உள்பட 40- க்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் மத்திய சிறைகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதேபோல, விவசாயம் சார்ந்த கோழிப்பண்ணை, மீன் பண்ணை உள்ளிட்ட தொழில்களும் தொடங்கப்படுகின்றன.
 இந்த வரிசையில் சென்னை புழலில் உள்ள பெண்கள் தனிச் சிறையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு முயல் பண்ணை தொடங்கப்பட்டது. சோதனை முறையில் இங்கு தொடங்கப்பட்ட இந்த முயல் பண்ணை இப்போது கைதிகளுக்கு வெற்றியையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள சிறைகளில் இங்கு மட்டும்தான் முயல் பண்ணை இருப்பது குறிப்பிடத்தக்கது.
 இங்குள்ள முயல் பண்ணையில் சுமார் 100 முயல்கள் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக மட்டுமன்றி, செல்லப்பிராணிகளாக வளர்க்கவும் முயல்கள் சிறை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 3- 5 முயல்கள் சிறை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன. இதில், முயல் குட்டி ஒன்று ரூ.150-க்கும், ஒன்றரை கிலோ எடையுள்ள முயல் ரூ.300-க்கும் விற்கப்படுகிறது.
 முயல் பண்ணை குறித்து புழல் மத்திய சிறையின் உயர் அதிகாரி கூறியதாவது:
 பண்ணையில் முயல்கள் சுகாதாரமாக வளர்க்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து முயல்களும் இரு வாரங்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர்களால் சோதனை செய்யப்படுகின்றன. மேலும், முயல்கள் விரும்பிச் சாப்பிடும் இலைகளும், காய்கறிகளும் கோயம்பேடு சந்தையிலிருந்து மூன்று நாள்களுக்கு ஒரு முறை சுமார் 300 கிலோ அளவில் வாங்கப்படுகின்றன.
 அதோடு, முயல் பண்ணையில் வேலை செய்யும் கைதிகளுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்க தடுப்பூசிகளும் அவ்வப்போது போடப்படுகின்றன. பிற தனியார் முயல் பண்ணைகளைக் காட்டிலும், இங்கு முயல் பண்ணை அதிகக் கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 சிறை அங்காடிகளில் முயல் விற்பனை அதிகரித்து வருவதால், இந்தப் பண்ணையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது, முயல் பண்ணை பணியில் ஈடுபட்டுள்ள கைதிகளிடம் மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.
 அதேவேளையில், சிறை அங்காடி மூலம் முயல்களின் விற்பனையை மேலும் அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com