புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

4 முக்கிய ரயில் நிலையங்களில் 122 சிசி டிவி கேமராக்கள்

சென்னையின் முக்கியமான 4 ரயில் நிலையங்களில் 122 சிசி டிவி கேமராக்கள் பொருத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே பொருத்தப்பட்டு தரமற்றுள்ள கேமராக்களை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2016, 11:20 pm

சென்னையின் முக்கியமான 4 ரயில் நிலையங்களில் 122 சிசி டிவி கேமராக்கள் பொருத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே பொருத்தப்பட்டு தரமற்றுள்ள கேமராக்களை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரூ.41 கோடியே 60 லட்சம் செலவில் 625 சிசி டிவி கேமராக்கள் 2012-ஆம் ஆண்டில் பொருத்தப்பட்டன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் அனைத்து நுழைவாயில்கள், நடைமேடைகள் என 81 சிசி டிவி கேமராக்களும், இதற்கு அடுத்தப்படியாக காட்பாடி ரயில் நிலையத்தில் 46 சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சிசி டிவியின் தரமின்மையால் நிலுவையில் உள்ள வழக்குகள்: இந்த நிலையில், சிசி டிவி கேமராக்கள் தரம் உயர்த்தப்படாததால். ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக ரயில்வே போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2015-இல் குழந்தை கடத்தல், 2014-இல் நின்று கொண்டிருந்த குவாஹாட்டி விரைவு ரயிலில் குண்டு வெடித்து பெண் இறந்த சம்பவம் ஆகிய குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் ரயில்வே போலீஸார் திணறி வருகின்றனர். பதிவாகியுள்ள காட்சிகள் துல்லியமாக இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதவிர, இரவு நேரப் பதிவுகளிலும் துல்லியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

முடிவில் இப்போதுள்ள சிசி டிவி கேமராக்களின் தரம் சரியில்லை என்றும் நவீன சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக புதிய நவீன ரக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

நுங்கம்பாக்கம் சம்பவத்தையடுத்து பணிகள் தீவிரம்: இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த வெள்ளிக்கிழமை காலை கொலை செய்யப்பட்டார். ஆனால், ரயில் நிலையத்தின் உள்ளே சிசி டிவி கேமரா இல்லாததால், கொலையாளியை அடையாளம் காண முடியவில்லை.

இந்த நிலையில், முதல்கட்டமாக தரத்துடன் கூடிய கேமிராக்களை 4 முக்கிய ரயில் நிலையங்களில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் அதிக குற்றங்கள் நடக்கும் ரயில் நிலையங்களைத் தேர்வு செய்து, கண்காணிப்பு கேமராக்கள் அதிவேகமாகப் பொருத்தப்பட்டு வருகின்றன.

இப்போது புதிய கேமராக்கள் பொருத்துவது குறித்து மத்திய ரயில்வே வாரியத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இப்போது முதல்கட்டமாக 4 ரயில் நிலையங்களில் 122 சிசி டிவி கேமராக்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சென்ட்ரலில் கூடுதலாக 48, எழும்பூரில் கூடுதலாக 28, பேசின்பிரிட்ஜில் கூடுதலாக 24, தாம்பரத்தில் கூடுதலாக 22 சிசி டிவி கேமராக்களும் பொருத்தும் பணிகளைத் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

இதர ரயில் நிலையங்களில் எப்போது? இவை தவிர, எழும்பூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம் சந்திப்பு, மதுரை சந்திப்பு, கோவை சந்திப்பு, திருச்சி, கோழிக்கோடு, மங்களூரு, புறநகர் ரயில் நிலையங்களான சென்னை கடற்கரை, மாம்பலம், தாம்பரம், பேசின் பிரிட்ஜ், திருவள்ளூர் ரயில் நிலையங்களிலும் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோன்று சென்னையில் உள்ள இதர ரயில் நிலையங்களிலும் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். இப்போது நுங்கம்பாக்கம் சம்பவத்தையடுத்து, இந்தக்கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.

நான் சுவாதி பேசுகிறேன்! கட்செவி அஞ்சலில் உலா வரும் கற்பனை உரையாடல்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட பெண் பொறியாளர் சுவாதி பேசுவதுபோல ஒரு கற்பனையான உரையாடல், "நான் சுவாதி பேசுகிறேன்' எனும் தலைப்பில் கட்செவி அஞ்சலில்  (வாட்ஸ் அப்) வேகமாக பரவி வருகிறது.

இதில் கூறப்பட்டுள்ளதாவது:

"இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைப்படுகிறேன்.

எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதாயத்தில் நானும் ஒருத்தி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதி நாள்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன், என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார்.

உங்களில் எத்தனை பேர் இன்று அந்தக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உங்களின் மனதுக்கு தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழிய பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது. இன்று நான் வாய்கிழியபட்டு தான் இறந்தேன்.

உங்களில் ஒருவருக்கு கூட அதை தடுக்க எண்ணம் இல்லையே. அவன் போன பின்பு எனக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணீர் கொடுக்க கூடவா ஆள் இல்லை.

2 மணி நேரம் என்னை வேடிக்கை பார்த்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களை சுடவில்லையா? பெண் பிள்ளைகள் வெளியில் போகும் போது பார்த்துப் போக சொல்லும் நீங்கள், அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்தப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச் செய்யுங்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.