

சென்னையில் தலைக்கவசம் அணியாத காவலர்கள் மீதும் வழக்குப் பதியுமாறு காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் இயங்கும் வாகனங்களில் 78 சதவீதம் இரு சக்கர வாகனங்களாகும். சுமார் 30 லட்சம் இரு சக்கர வாகனங்கள் சென்னையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் சென்னையில் அதிகப்படியான சாலை விபத்துக்களில் சிக்குவதில் இரு சக்கர வாகனங்களே முதலிடத்தில் இருக்கின்றன. மொத்த விபத்தில் 25 சதவீத விபத்துகள், இரு சக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன.
தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்று விபத்தில் சிக்குவோரில் 90 சதவீதம் பேர் உயிரிழப்பதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவிக்கிறது.
மேலும் தலைக்கவசம் இல்லாத பயணத்தால் ஆண்டுக்கு சுமார் 600 பேர் வரை இறப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.
இந்தக் காரணங்களாலும், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் காரணமாகவும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சென்னையில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதியப்படுகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர் மீது கடந்த இரு மாதங்களாக தீவிரமாக வழக்குப் பதியப்படுகிறது.
இதற்காக சென்னை முழுவதும் 200 இடங்களில் தினமும் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக சுமார் இரண்டரை லட்சம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக இரு மாதங்களுக்கு முன்பு தலைக்கவசம் அணிந்து சுமார் 40 சதவீதம் பேரே வாகனங்கள் ஓட்டினர். இப்போது அந்த எண்ணிக்கை 85 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
பெருமளவிலான வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வருவதால், வழக்குகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியிருப்பதாக போக்குவரத்து பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில் எஞ்சியிருக்கும் 15 சதவீத வாகன ஓட்டிகளையும் தலைக்கவசம் அணிய வைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் அண்மையில் ஆலோசித்தனர்.
இதில் பெரும்பாலும் காவல்துறையினர், அவர்களது குடும்பத்தினர், அரசு ஊழியர்கள், அரசு உயர் அதிகாரிகள் குடும்பத்தினர், பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் தலைக்கவசம் அணியாமல், தங்களது செல்வாக்கை பயன்படுத்தி போலீஸாரிடமிருந்து தப்புவது தெரியவந்தது.
காவலர்கள் மீது வழக்கு: இதில் முதல் கட்டமாக காவலர்களை தலைக்கவசம் அணிய வைப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸாருக்கு சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். "கடந்த ஒரு வாரமாக, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் காவலர்கள் மீது வழக்குப் பதியப்படுகிறது. ஒரு வாரத்தில் சுமார் 100 வழக்குகள் காவலர்கள் மீது பதியப்பட்டுள்ளன.
சென்னை போலீஸாரை விட, வெளியூர் காவலர்களே அதிக அளவில் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதால், அவர்கள் மீது அதிகமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன' என்று சென்னை காவல்துறை போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறுகிறார். அதேபோல போலீஸ் என ஸ்டிக்கர் ஓட்டிக் கொண்டு, அந்த வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் யார் வந்தாலும் அவர்கள் மீதும் வழக்குப் பதியப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
போக்குவரத்து போலீஸாரின் இந்த நடவடிக்கையால் காவலர்களும், தலைக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனர். இப் பிரச்னையில் காவலர்களும் தலைக்கவசம் முழுமையாக அணியத் தொடங்கிவிட்டால், சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை மேலும் குறையும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிபாரிசு செய்யும் அதிகாரி யார்?
தலைக்கவசம் அணியாமல் சென்ற வழக்கு, மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்கு ஆகியவற்றில் வாகன ஓட்டிகளை விடுவிக்கக் கோரி பரிந்துரை செய்யும் காவல்துறை அதிகாரிகள் பற்றிய தகவல்களை அறிக்கையாக தரும்படி சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் கேட்டுள்ளார்.
சென்னையில் போலீஸாரின் வாகனச் சோதனையின்போது, விதியை மீறியதால் சிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளில் பலர் தங்களது செல்வாக்கையும், சிலர் காவல்துறை அதிகாரிகளுடன் தாங்கள் நெருக்கமான நட்பு வைத்திருப்பதாகவும் கூறி வழக்கில் இருந்து தப்பிக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இதை அண்மையில் நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை போக்குவரத்து பிரிவு உயர் அதிகாரிகள் புகாராக ஆணையர் ஜார்ஜியிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆணையர் ஜார்ஜ், வாகனச் சோதனையின்போது பிடிபடுவர்கள், காவல்துறை அதிகாரிகளை செல்லிடப்பேசி மூலம் பேச வைத்து, தப்பிச் சென்றால் அது குறித்த அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் பரிந்துரை செய்து செல்லிடப்பேசியில் பேசும் அதிகாரிகள் பெயரையும், அவர் எத்தனை முறை இவ்வாறு பேசியுள்ளார் என்ற தகவலையும் அந்த அறிக்கையில் அளிக்கும்படியும் ஜார்ஜ் கேட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.