ரித்தீஷ் மீதான மோசடி புகாரின் நிலை என்ன?
ஜே.கே. ரித்தீஷ் மீதான ரூ.2.18 கோடி மோசடி புகாரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை போரூர் அருகே கெருகம்பாக்கம் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (42). இவர் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில் மென்பொருள் கன்சல்டிங் நிறுவனத்தை விற்றுவிட்டு, தமிழகத்துக்கு 2013-ஆம் ஆண்டில் வந்தார்.
இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ஜனவரியில் எம்.பி.யாக இருந்த ஜே.கே.ரித்தீஷை சந்தித்தபோது பினாமிகள் மூலம் நடத்திவரும் ரியல் எஸ்டேட்- குவாரி, கேரள அரசுக்குச் சொந்தமான கழிவுப் பொருள்கள் விற்கும் தொழில்களில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறியதால் பல கட்டங்களாக ரூ.2.18 கோடி அளித்தாகவும், சில நாள்கள் சிறிதளவு பணத்தை கொடுத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், இதற்காக அவர் அளித்த ரூ.3 கோடிக்கான காசோலை திரும்பிவிட்டதாகவும் 2015ஆம் ஆண்டு அக்டோபரில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதிநாராயணன் புகார் கொடுத்தார்.
இந்த மனு மீதான விசாரணை செய்யப்படாமல், முடித்து வைக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், ஆதிநாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் மறுவிசாரணை செய்யுமாறு சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ஆதி நாராயணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் இருந்து சொந்த ஊரில் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையுடன் தமிழகம் வந்தேன். இதற்காக ரித்தீஷை சந்தித்து பேசியபோது, தில்லியிலும், மக்களவையிலும் தனக்கு செல்வாக்கு இருப்பதைப் போல காட்டினார்.
என்னிடம் இருக்கும் பணத்தை அபகரிக்கும் நோக்கிலேயே முதலில் இருந்து செயல்பட்டு வந்துள்ளார். பணத்தை இழந்த பின்னரே உணர்ந்தேன். வாழ்நாள் சேமிப்பையும், எதிர்காலத்தையும் இழந்துள்ளேன். வேறு வழியில்லாமல் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்.
மோசடி குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே ரித்தீஷ் மீது போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது வேதனை அளித்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும், வழக்குப் பதியாமல் இழுத்தடிக்கப்படுகிறது. ஏற்கெனவே போலி காசோலை கொடுத்தது தொடர்பாக, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ரித்தீஷ் மீது ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளேன் என்றார்.
இதுகுறித்து ரித்தீஷை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, இதுகுறித்து பேசவில்லை.
"முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியப்படும்'
மோசடி செய்தற்கான முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயராகவன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆதிநாராயணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. புகாரில் கூறியுள்ள தகவலை உறுதி செய்ய, ஆவணங்கள் பெற்று ஆய்வு செய்து வருகிறோம். இதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆவணங்கள் அனைத்தும் கிடைத்தவுடன், சட்ட ஆலோசனை பெறப்படும். மோசடி செய்தற்கான முகாந்திரம் இருந்தால், ரித்தீஷ் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் விசாரணை செய்து முடிப்பதற்கு நீதிமன்றம் போலீஸýக்கு கால நிர்ணயம் எதுவும் செய்யவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

