

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடை வைப்பதற்கு, வடிப் பொருள் சட்ட விதிமுறைகளை பின்பற்றினால்தான் உரிமம் பெறுவதற்குரிய தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 29 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தாற்காலிக பட்டாசு கடைகள் ஆங்காங்கு திறக்கப்படுகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில், பட்டாசு கடைகள் வைப்பதற்குரிய விதிமுறைகளை தீயணைப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.
தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல் துறை அல்லது வருவாய் துறையிடமிருந்து உரிமம் பெற முடியும்.
இந்த நிலையில், பட்டாசு கடைகளை ஒழுங்குப்படுத்த தீயணைப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், பட்டாசு கடைகள் வைப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர்தான் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிமுறைகள்: வெடிப் பொருள் சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் காங்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். கடையின் இரு புறங்களிலும் வழி கட்டாயம் இருக்க வேண்டும். கட்டடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றின் கீழ் பட்டாசு கடைகளை வைக்கக் கூடாது, பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டர் குறைவானதாக இருக்கக் கூடாது, அதேபோல அந்த அறை 25 சதுர மீட்டருக்கு அதிகமான சுற்றளவிலும் இருக்கக் கூடாது.
ஒரு பட்டாசு கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். உதிரி பட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. "இங்கு புகை பிடிக்கக்கூடாது" உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளை பட்டாசு கடை முன்பு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ட்டாசு கடையின் அருகே தீயணைப்புத் துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும்.
உரிமம் பெற்ற கட்டடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக் கூடாது உள்பட 30 விதிமுறைகள் உள்ளன. இவற்றை பின்பற்றினால்தான் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இவற்றை மீறும் பட்டாசு விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் சோதனை: இந்த விதிமுறைகளை பட்டாசு கடைகள் பின்பற்ற தவறும் நிலையில், தடையில்லாச் சான்றிதழைக் கண்டிப்பாக வழங்கக் கூடாது எனத் தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள், தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பட்டாசுக் கடை வைப்பதற்குரிய தடையில்லாச் சான்றிதழை கள ஆய்வு செய்த பின்னரே வழங்க வேண்டும் எனவும், தாற்காலிக பட்டாசு கடைகளில் திடீர் சோதனை நடத்தும்படியும் தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதில் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால், அந்த கடைக்குரிய உரிமத்தை ரத்து செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பமும், அனுமதியும்
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளியையொட்டி தாற்காலிக பட்டாசு கடைகள் வைக்க தீயணைப்புத் துறைக்கு வந்த விண்ணப்பங்கள், அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்த விவரம்:
ஆண்டு 2013 2014 2015
பட்டாசு கடை அனுமதிக்கு வந்த விண்ணப்பங்கள் 6320 5830 6058
அனுமதி பெற்றக் கடைகள் 6060 5619 5683
அதிகரிக்கும் பட்டாசு கடைகள்
சென்னையில் தீபாவளியையொட்டி திறக்கப்படும் தாற்காலிக பட்டாசு கடைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு தாற்காலிக பட்டாசு கடைகள் திறப்பதற்கு 1,345 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன. இவர்களில் 1,312 பேர் தடையில்லா சான்றிதழ் மூலம் உரிமம் பெற்று பட்டாசு கடைகளை திறந்தனர்.
இதேபோன்று 2014 -ஆம் ஆண்டு பெறப்பட்ட 1,245 விண்ணப்பங்களில் 1,215 விண்ணப்பங்களுக்கும், 2013 -இல் பெறப்பட்ட 1,323 விண்ணப்பங்களில் 1,070 பேருக்கும் பட்டாசு கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, சென்னையில் பட்டாசு கடைகளின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.