ஒரே நாளில் 100 சிக்னல்களில் போக்குவரத்து விழிப்புணர்வு
By dn | Published On : 08th August 2016 04:16 AM | Last Updated : 08th August 2016 04:16 AM | அ+அ அ- |

சென்னையில் 100 சிக்னல்களில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது "எமன்' வேடமணிந்த தன்னார்வலர்கள் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து விளக்கினர்.
விபத்தில்லா தேசம் எனும் கருத்தை வலியுறுத்தி, "தோழன்' எனும் தன்னார்வ அமைப்பின் தன்னார்வலர்கள் 2,500 பேர் 100 குழுக்களாகப் பிரிந்து, அசோக் பில்லர், வடபழனி, அடையாறு, தியாகராயநகர் உள்பட நகரின் 100 முக்கிய சிக்னல்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 முதல் இரவு 7 வரை நிகழ்ச்சியை நடத்தினர்.
அப்போது தலைக்கவசம் அணியாத, காதொலிக்கருவியில் பாடல் கேட்டபடி வந்த, சாலை விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளிடம் "எமன்' வேடமணிந்தோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், பாதசாரிகள் கவனிக்க வேண்டிய வழிமுறைகள், சீட் பெல்ட் அணிய வேண்டியதன் அவசியம். மது அருந்து விட்டு ஓட்டுவதால் நிகழும் விபத்துகள் போன்ற தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் அவர்கள் விநியோகித்தனர்.
இதுகுறித்து "தோழன்' அமைப்பினர் கூறியதாவது:-
நாட்டில் 2015-ஆம் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2,07,500 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 17,023 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 24 பேர், அதாவது 2.5 நிமிஷங்களுக்கு ஒருவர் விபத்தில் உயிரிழக்கிறார் என்றார்.
அசோக் பில்லர் அருகே நடைபெற்ற தொடக்க விழாவில், காவல் முன்னாள் ஆணையர் நாஞ்சில் குமரன், நாட்டின் முதல் போக்குவரத்து பொறியாளர் என்.எஸ்.சீனிவாசன், தோழன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.