தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு பிறகே வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க உத்தரவு
By சென்னை, | Published On : 01st June 2016 01:44 AM | Last Updated : 01st June 2016 01:44 AM | அ+அ அ- |

பள்ளி வளாகங்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்த பின்னரே, வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பள்ளிகளில் நிகழாண்டில் மாணவ, மாணவிகளுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் போது (ஜூன் 1) மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள், ஏடுகள், விலையில்லாச் சீருடைகள், இதர மாணவர் நலத்திட்ட பொருள்கள் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள், சுகாதாரப் பணிகள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் ஆய்வு: மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு பள்ளிகளில் தூய்மை சுகாதாரப் பணிகள், மராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, வகுப்பறைகளைச் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தூவ வேண்டும். வகுப்பறையில் மின்சார பொத்தான்கள், மின் கசிவு கோளாறுகள் ஏதேனும் உள்ளதா எனவும், கட்டடங்களின் மேற்கூரை உறுதியாக உள்ளதா எனவும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
மாணவர்கள் உணவு இடைவேளை நேரங்களிலும், வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் போதும், அருகில் உள்ள நீர் தேக்கங்கள், திறந்தவெளி கிணறுகளுக்கு செல்லுதல், இருசக்கர வாகனம் ஓட்டுவதால் வரும் ஆபத்து குறித்து அறிவுரை வழங்க வேண்டும்.
மேலும், வளாகத்தில் உயர் மின் அழுத்த கம்பிகள், அறுந்து தொங்கும் மின் கம்பிகள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்: வகுப்பறைகள், சுற்றுச் சுவர் பாதித்திருந்தால் அதன் அருகே மாணவர்கள் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.
தேவையின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி இணைப் பிரிவுகளைத் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை மேற்பார்வையிட வேண்டும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், கள அலுவலர்கள் ஆகியோர் தலைமையாசிரியர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய அறிவுரை வழங்கி கண்காணிக்க வேண்டும்.