தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்

யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பின் முன்னாள் ஆசிரியரும், தமிழறிஞருமான மணவை முஸ்தபா (82) சென்னையில் திங்கள்கிழமை காலை 6 மணியளவில் காலமானார்.
தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்

யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பின் முன்னாள் ஆசிரியரும், தமிழறிஞருமான மணவை முஸ்தபா (82) சென்னையில் திங்கள்கிழமை காலை 6 மணியளவில் காலமானார்.
இவருக்கு மனைவி செளதா, மகன்கள் அண்ணல், செம்மல், மகள் தேன்மொழி ஆகியோர் உள்ளனர்.
உடல் நலக் குறைவு காரணமாக, 2007-ஆம் ஆண்டு முதல் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். சொந்த ஊரான திருச்சி மாவட்டம் மணப்பாறை மீது இருந்த பற்றினால், தனது பெயருக்கு முன்பு மணவையை சேர்த்துக் கொண்டார்.
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு இவர் அளவுக்கு தமிழில் பங்காற்றியவர்கள் குறைவு. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறை சார்ந்த 8 கலை சொல் அகராதிகளை தனியாகவே வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமும், சமய நல்லிணக்கமும், தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், அண்ணலாரும் அறிவியலும், மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும், வலம் வந்த உலகம் உள்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளத்தில் இருந்து பல நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார்.
விருதும், பரிசும்: மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம் நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசும், இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் நூலுக்கு தமிழக அரசின் இரண்டாம் பரிசும், அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதிக்கு அனந்தாச்சாரி ஃபெளண்டேஷன் ஆஃப் இந்தியாவின் முதல் பரிசும் கிடைத்துள்ளது.
தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க.விருது, ஆழ்வார் ஆய்வு மையம் சார்பில் எம்ஜிஆர் விருது, சிந்தனையாளர் கழகம் சார்பில் அறிவியல் தமிழ்ச் சிற்பி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஆற்றிய பணிகள்: யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 35 ஆண்டுகள் இருந்துள்ளார். ஆனந்த விகடன் சார்பில் வெளியிடப்பட்ட என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் தமிழ்ப் பதிப்புக்கு தலைமை பொறுப்பாசிரியராக இருந்துள்ளார்.
ஸ்டாலின், வைகோ நேரில் அஞ்சலி: அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இன்று இறுதிச் சடங்கு: முஸ்தபாவின் இறுதிச் சடங்கு அமைந்தரையில் உள்ள பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு: 8939462185

தலைவர்கள் இரங்கல்

மணவை முஸ்தபா மறைவுக்கு, பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர்: அறிவியல் தமிழின் தந்தை என அழைக்கப்பட்ட மணவை முஸ்தபா மறைவுச் செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். அறிவியல் தமிழின் செழுமைக்காக எட்டு அகராதிகளை பதிப்பித்து வெளியிட்டவர். தமிழை நவீனப்படுத்துவதற்கு அவரின் நூல்கள் பெருந்துணையாக உள்ளன.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழுக்கும் அறிவியலுக்கும் மணவை முஸ்தபாவுக்கு இணையான பங்களிப்புச் செய்தவர்கள் யாருமில்லை. தமிழைச் செம்மொழியாக்க முஸ்தபா மிகக் கடுமையாக உழைத்தார். இதற்காக பல்வேறு யோசனைகளை தமிழக அரசுக்கு அவர்தான் வழங்கினார். அவரின் மறைவு அறிவியலுக்கும், தமிழுக்கும் ஈடு செய்ய முடியாததாகும்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்: எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மூன்று முதல்வர்களால் 5 விருதுகள் அளிக்கப் பெற்று பாராட்டப்பட்ட ஒரே தமிழறிஞர் முஸ்தபாதான். தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com