கலப்படம் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்

உணவுப் பொருள்களில் கலப்படம் குறித்து தெரியவரும் நிலையில் எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி உணவுப் பாதுகாப்புத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கலப்படம் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்
Updated on
1 min read

உணவுப் பொருள்களில் கலப்படம் குறித்து தெரியவரும் நிலையில் எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி உணவுப் பாதுகாப்புத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
 இதுகுறித்து அந்தத் துறையின் உயரதிகாரிகள் கூறியதாவது: உணவுப் பொருள்களில் கலப்படம், உணவகங்களில் சுகாதாரச் சீர்கேடு, தெருவோரக் கடைகளில் உள்ள விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிவிப்பதற்காக தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. இந்த எண்ணில் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகியும் இந்த எண் குறித்து பொதுமக்கள் போதுமான விழிப்புணர்வு பெறவில்லை எனத் தெரிகிறது.
 சாலையோர தள்ளுவண்டிக் கடைகள், உணவகங்கள் தவிர்க்க முடியாத விஷயங்களாக மாறி விட்ட இன்றைய சூழலில் அங்கு விற்படும் உணவுகளின் தரம் குறித்து பொதுமக்களுக்கு அக்கறையும், விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியம். நேரடியாகப் புகார் தெரிவிக்க நேரமின்மை, தயக்கம் உள்ளிட்ட காரணங்கள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததால் கடந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் வாட்ஸ் ஆப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
 இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட புகார்களும், சென்னையில் மட்டும் 400 புகார்கள் வரையிலும் பெறப்பட்டுள்ளன. அவற்றில் பிளாஸ்டிக் காகிதத்தில் உணவு வழங்கப்படுகிறது; திறந்து நிலையில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுகிறது என்ற புகார்களே அதிகளவில் பெறப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கடைகளில் புகார் தெரிவிக்க வேண்டிய செல்லிடப்பேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையிலும் எதிர்பார்த்த அளவுக்கு புகார்கள் வராதது சற்று ஏமாற்றமாகவே உள்ளது.
 புகாருக்குப் பிறகு என்ன நடக்கும்? உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ள 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளித்தால், அந்தப் புகார் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள துறையின் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து அவர் அந்த இடத்தில் ஆய்வு செய்து அங்குள்ள நிலை குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார்.
 அதைத் தொடர்ந்து அந்தக் கடையின் உரிமையாளருக்கு உணவு அல்லது சுகாதாரச் சீர்கேட்டை சரி செய்ய நோட்டீஸ் அனுப்பப்படும். நோட்டீஸ் அனுப்பப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் சீர்கேடு அல்லது குறையைச் சரி செய்யாவிட்டால் ரூ.10,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்படும்.
 எனவே பொதுமக்கள் தாங்கள் செல்லும் சாலையோரக் கடைகள், பொருள்கள் வாங்கும் மளிகைக் கடைகள், உணவகங்களில் பொருள்களின் தரம், தூய்மை ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com