

சென்னையில் மதுபோதையில் பொதுஇடங்களில் தகராறு செய்பவர்களை கட்டுப்படுத்துவதற்கு போலீஸார் "பெப்பர் ஸ்பிரே'யை பயன்படுத்தும் புதிய உத்தியை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் 135 காவல் நிலையங்கள் உள்ளன. சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னையில் பாதுகாப்பு பணியில் சுமார் 12 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குற்றங்களை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் போலீஸார் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் வசிப்பதை உறுதி செய்ய, போலீஸார் அண்மை காலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், சென்னையில் மதுபோதையில் இருப்பவர்களால் ஏற்படும் பிரச்னைகளும், மோதல்களும், தகராறுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை போலீஸார் எடுத்தாலும், மதுபோதையில் இருக்கும் நபர்கள் செய்யும் செயல்களை கட்டுப்படுத்துவது என்பது சவாலான பணியாகவே உள்ளது.
மதுவுக்கு 50 சதவீதம் பங்கு: சென்னையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களிலும், பிற அரசு விடுமுறை நாள்களிலும் மதுபோதையினால் ஏற்படும் தகராறுகள் அதிகம் என போலீஸார் கூறுகின்றனர். நகரில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு மதுவும் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. நடைபெறும் குற்றங்களில் 50 சதவீதம் குற்றச் செயல்களில் மதுவின் பங்கு இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறினார்.
இதன் விளைவாகவே மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீஸார் கடுமையான அபராதம் விதிக்கின்றனர். இதன் அடுத்தக் கட்டமாக மதுபோதையினால் தகராறு செய்பவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள், மோதலில் ஈடுபடுபவர்கள் ஆகியோரை கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.
400 பாட்டில் பெப்பர் ஸ்பிரே: இந்த ஆலோசனையின்படி, பொது இடங்களில் மதுபோதையில் தகராறு செய்பவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து, அவர்களைக் கட்டுப்படுத்துவது என அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி சோதனை முயற்சியாக, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் மட்டும் இந்த உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக அம்பத்தூர் காவல் மாவட்டத்துக்கு சுமார் 400 பாட்டில் பெப்பர் ஸ்பிரே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக கடந்த ஜூன் மாதம் வாங்கப்பட்டது.
இந்த பாட்டில்கள், முதல் கட்டமாக அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள 15 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு தலா 10 பாட்டில்கள் என வழங்கப்பட்டுள்ளன. இந்த பெப்பர் ஸ்பிரே பாட்டில்களை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிக்கு செல்லும் காவலர்கள் எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் மதுபோதையில் எல்லையை மீறி செயல்படும் நபர்கள் மீது ஸ்பிரே அடித்து வருகின்றனர்.
விரிவுபடுத்த ஆலோசிப்போம்: இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி கூறியது:
மது அருந்துபவர்களின் செயல்களால் பலநேரங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு கூட பாதிக்கப்படுகிறது. அதேவேளையில் போதையில் இருக்கிறவர்கள், மது போதை இறங்கியதும் மிகவும் நல்லவராக மாறிவிடுகின்றனர். இதன் விளைவாக வழக்கின் விசாரணையின்போது பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
மதுபோதையின் விளைவாக ஏற்படும் அடிதடி,மோதல்,தகராறு தொடர்பாக சென்னையில் தினமும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்கவே, பெப்பர் ஸ்பிரே அடிப்பது என முடிவு செய்தோம்.
இதை சோதனை முறையில் இப்போது செயல்படுத்துகிறோம். இதில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து,இத் திட்டத்தை அடுத்தக் கட்டமாக விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்போம் என்றார் அவர்.
என்ன பாதிப்பு ஏற்படும் ?
மதுபோதையில் இருக்கும் நபர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்ததும், உடனே கண் எரிச்சல் ஏற்பட்டு, கண் தானாக மூடும், அடுத்ததாக தோலில் எரிச்சல் ஏற்படும். இந்த எரிச்சல் தன்மை தோலின் மீது ஆழமாக நீண்டநேரம் நீடிக்கும்.
இதேபோல மூக்கில் எரிச்சல் ஏற்பட்டு,வலி ஏற்படும். குறைந்தபட்சம் 45 நிமிஷம் வரை கடுமையான பாதிப்புகளை இந்த ஸ்பிரே ஏற்படுத்தும். இந்த ஸ்பிரே அதிகபட்சம் 3 மணி நேரம் பாதிப்பை உணரச் செய்யும். கண்ணீர் புகை குண்டுகளை விட வேகமாக இந்த ஸ்பிரே செயல்படும் என்பதாலேயே, இதை போலீஸார் தேர்வு செய்துள்ளனர்.
இந்த ஸ்பிரே தற்பாதுகாப்புக்கு பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. காய்ந்த மிளகாயில் இருந்து இந்த ஸ்பிரே தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்பிரே ஆயுதச் சட்டத்தின் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.