உலமாக்களுக்கு நலவாரியம் மூலம் அடையாள அட்டை
By DIN | Published On : 30th November 2018 04:08 AM | Last Updated : 30th November 2018 04:08 AM | அ+அ அ- |

பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரிவோர் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறும் வகையில் உலமா அடையாள அட்டை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: பள்ளி வாசல்கள், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரிவோர், அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற உலமா அடையாள அட்டை அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல்கள், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை, விபத்து நிவாரணம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே பதிவு பெற்ற உறுப்பினர்கள் 60 வயது அடைந்து ஓய்வுபெற்றிருப்பவர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பெறுவதற்கு உலமா அடையாள அட்டை அசல், வக்ஃபு வாரியச் சான்று-எந்தப் பள்ளிவாசலில் ஓய்வு பெற்றவர், ஓய்வு பெற்ற சான்று, வேறு அரசுத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறவில்லை என்ற வருவாய்த் துறை சான்று, மருத்துவச் சான்றிதழ், வங்கிக் கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -1 என்ற முகவரியை அணுகி பயன் பெறலாம்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G