

சென்னைக்கு சொகுசு கார்களில் போதைப் பாக்கு கடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க மசாலா, பிஸ்கட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்தும் போதைப் பாக்கு பாக்கெட்டுகள் கொண்டு வரப்படுகின்றன.
தமிழகத்தில் போதைப் பாக்கு, குட்கா ஆகியவற்றுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டாலும், அதைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் அப்போது எடுக்கப்படவில்லை.
கடந்த 2016-இல் சென்னை அருகே செங்குன்றத்தில் ஒரு கிடங்கில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், அங்கிருந்து மாநிலம் முழுவதும் போதைப் பாக்கு தயார் செய்யப்பட்டு அனுப்பப்படுவதும், அதற்கு காவல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, வணிக வரித் துறை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மாதந்தோறும் லஞ்சம் வாங்குவதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்துக்கு பின்னரே, போதைப் பாக்கு, குட்கா மீதான நடவடிக்கை தீவிரமடைந்தது. இதனால், சரக்கு வாகனங்களில் தாராளமாக கொண்டு வரப்பட்ட போதைப் பாக்கு, அதன் பின்னர் மறைமுகமாக லாரிகளிலும், வேறு பொருள்களின் பெயரில் கனரக வாகனங்களிலும் கடத்தப்பட்டன.
இதையறிந்த போலீஸார், இந்த வாகனங்களைக் குறிவைத்து சோதனை செய்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து, ரயில் பார்சல் சேவை மூலம் போதைப் பாக்குகள் கடத்தப்பட்டன. அதையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இருப்பினும், போதைப் பாக்கு வியாபாரிகள் புதுப்புது வழிகளில் போதைப் பாக்குகளை கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தி வருவது தொடர்கிறது.
சொகுசு கார்களில் கடத்தல்: இதன் தொடர்ச்சியாக போதைப் பாக்குகளை விலை உயர்ந்த சொகுசு கார்களிலும், தனியார் சொகுசு ஆம்னி பேருந்துகளிலும் கடத்தி வருவது தெரியவந்துள்ளது. இதற்காக போதைப் பாக்கு வியாபாரிகள், பழைய சொகுசு கார்களை கோயம்புத்தூர், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள வாகன பழுது நீக்கும் மையங்களில் போதைப் பாக்கு மூட்டைகளை மறைத்து வைப்பதற்கு ஏற்றாற்போல் உள்வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து வைத்துள்ளனர்.
கடத்தலுக்கு பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் காவல்துறையிடம் சிக்க நேரிட்டாலும், வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடி விடலாம் என்பதாலேயே அந்த வாகனங்களைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த வாகனங்கள் மூலம் கடத்தப்படும் போதைப் பாக்கு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கிடங்குகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து கடைகளுக்கு மசாலா, பிஸ்கட் பாக்கெட், நொறுக்குத் தீனி உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யும் சுமை ஆட்டோ, மினி வேன் போன்ற வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது.
மசாலா, பிஸ்கட் பாக்கெட்: இந்த வாகனங்களில் மசாலா, பிஸ்கட், நொறுக்குத் தீனி போன்ற உணவுப் பொருள்களோடு மறைத்து வைத்து கடத்தப்படுவதால் வாகனச் சோதனையில் சிக்குவதில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கடைகளில் போதைப் பாக்கு விற்கும் வியாபாரிகளைக் கண்காணித்து, அவர்கள் மூலம் போதைப் பாக்கை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடத்தல் கும்பலை இயக்கும் பெங்களூரு வியாபாரிகள்
தமிழகத்தில் போதைப் பாக்கு கடத்தல் கும்பலை கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருக்கும் வட மாநில வியாபாரிகளே இயக்குகின்றனர். இங்கு போதைப் பாக்குக்கு தடை விதிக்கப்படும் முன்னர் வரை அப்பொருள் தயாரிப்பு, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என அனைத்தும் வட மாநில வியாபாரிகளிடம் இருந்தது. தடை விதிக்கப்பட்ட பின்னரும், அவர்கள் அரசு அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு போதைப் பாக்கு வியாபாரத்தை தடையின்றி செய்தனர்.
ஆனால், 2016-ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசின் நடவடிக்கை தீவிரமானதால், இந்த வியாபாரிகள் பெங்களூருவை மையமாக கொண்டு வியாபாரத்தை தொடங்கினர். பெங்களூருவில் இருந்தபடி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போதைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்கின்றனர்.
போதைப் பாக்கு ஆர்டர் செய்ததும், அதை உரிய இடத்தில் சேர்க்கும்வரை பொறுப்பை பெங்களூருவைச் சேர்ந்த வியாபாரிகளே ஏற்றுக் கொள்கின்றனர். இதில் பொருளைக் கொண்டு சேர்ப்பதற்கு தனியாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
பெங்களூருவில் 10 ஆயிரம் சிறு பாக்கெட்களை கொண்ட மூட்டை ரூ.28 ஆயிரத்துக்கு விற்கப்பட்டால், அது சென்னையில் ரூ.38 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இதில் இருந்து 60 சதவீதம் வரை லாபம் வைத்து சிறு வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்கின்றனர். தில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் விற்பனை செய்யும் போதைப் பாக்குகளை விட, சென்னையில் விற்பனை செய்யும் போதைப் பாக்கு தரம் குறைந்த
தாகும்.
இந்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழகத்துக்குள் கொண்டு வரப்படும் போதைப் பாக்குகளை முற்றிலும் தடுப்பதற்குரிய வாய்ப்பு இருப்பதால், காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
போதைப் பாக்கும்...காவல்துறை நடவடிக்கையும்...
ஆண்டு 2018 2017 2016 2015
வழக்கு 921 3,039 2,489 202
கைதானவர்கள் 1,058 3,281 3,100 430
பறிமுதலான போதைப்
பாக்கு பாக்கெட் 9,05,633 15,60,465 73,851 20,805
மதிப்பு ரூ.18.95 லட்சம் ரூ.27.66 லட்சம் ரூ.24.52 லட்சம் ரூ.5.86 லட்சம்
கைப்பற்றப்பட்ட
பணம் ரூ.9.33 லட்சம் ரூ.32.94 லட்சம் ரூ.21.94 லட்சம் ரூ.39 ஆயிரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.