தடைசெய்யப்பட்ட லாட்டரி வாட்ஸ்அப் மூலம் விற்பனை

சென்னையில் வாட்ஸ்அப் (கட்செவி அஞ்சல்) மூலம் லாட்டரி சீட்டு விற்கப்படுவது காவல்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடைசெய்யப்பட்ட லாட்டரி வாட்ஸ்அப் மூலம் விற்பனை



சென்னையில் வாட்ஸ்அப் (கட்செவி அஞ்சல்) மூலம் லாட்டரி சீட்டு விற்கப்படுவது காவல்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை லாட்டரி சீட்டு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வரை வருவாய் கிடைத்தது. தொழிலாளர்களின் உழைப்பை லாட்டரி சீட்டு சுரண்டி, அவர்களை தற்கொலை வரை கொண்டு சென்றதால், கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லாட்டரி விற்பனைக்கு அப்போதைய அதிமுக அரசு தடை விதித்தது. இதன் பின்னர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுகிறவர்களை போலீஸார் கைது செய்தனர்.
 தொடக்க காலகட்டத்தில், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் பின்னர், காவல்துறையின் கண்காணிப்பு குறைந்தது.
  இதனால் லாட்டரி சீட்டு விற்பனை திரைமறைவில் சுதந்திரமாக நடைபெறத் தொடங்கியது. அதேவேளையில் கேரளத்தில் இருந்து லாட்டரி சீட்டுகள் பேருந்துகள், ரயில்கள் மூலம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு போலீஸாரின் கெடுபிடிகளால், லாட்டரி சீட்டுகளின் எண்கள் மட்டும் தொலைபேசி, தொலைநகல் (ஃபேக்ஸ்) மூலம் பெறப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது.
வாட்ஸ்அப் மூலம் விற்பனை: இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, வேறு வகைகளில் எவ்வித இடையூறு இல்லாமலும், காவல்துறையினரின் கண்களை மறைத்தும் எளிதாக லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. முக்கியமாக சென்னையில் லாட்டரி சீட்டுகள் வாட்ஸ்அப் மூலம் விற்கப்படுகின்றன. லாட்டரி சீட்டுகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்படாத கேரளம், திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் முகவர்கள் மூலம்  வாட்ஸ்அப் மூலம் லாட்டரி சீட்டு எண்கள் அனுப்பப்படுகின்றன.
அந்த எண்களை, சென்னையில் பெரிய முகவர்கள் தங்களுக்கு கீழே இருக்கும் சிறிய அளவிலான முகவர்களுக்கு அனுப்புகின்றனர். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்கின்றனர். காலையில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு, மாலையில் குலுக்கல் நடத்தப்படுகிறது. இதில் பரிசு விழும் எண்களை வைத்திருக்கும் வாடிக்கையாளருக்கு உடனடியாக அதற்குரிய தொகை வழங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஒரு லாட்டரி சீட்டு ரூ.30-இல் இருந்து ரூ.100 வரை இப்போது விற்கப்படுகிறது. இதில் சிறிய முகவருக்கு ஒரு லாட்டரி சீட்டுக்கு ரூ.5-இல் இருந்து ரூ.7 வரை கமிஷன் கிடைக்கிறது. லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தால் தனியாக கமிஷன் வழங்கப்படுகிறது.
கேரளத்துக்கு ரூ.400 கோடி வருவாய்: இது தொடர்பாக, லாட்டரி சீட்டு விற்பனையில் முன்பு ஈடுபட்டிருந்த, பெயர் வெளியிட விரும்பாத வியாபாரி ஒருவர் கூறியது:
கேரள மாநில லாட்டரி சீட்டுகளில் 40 சதவீதம் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கேரள அரசுக்கு லாட்டரி சீட்டு மூலம் சுமார் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் ரூ.400 கோடி தமிழகத்தில் விற்கப்படும் லாட்டரி சீட்டு மூலமே கிடைக்கிறது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு 2003-ஆம் ஆண்டே தடை செய்யப்பட்டாலும், அத் தொழிலில் ஏற்கெனவே இருந்த சிலர் இன்னும் அந்தத் தொழிலை மறைமுகமாக அரசியல் கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக காவல்துறையினரால் பெரியளவில் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு இடையூறு ஏற்படுகிறது.
இதன் காரணமாக லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டு 16 ஆண்டுகளாகியும் இன்னும் அந்த தொழில் உயிர்ப்புடன் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகிறது என்றார் அவர்.
தலைமையிடம் கோயம்பேடு: சென்னையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்தாலும், அது போதுமானது இல்லை எனக் கூறப்படுகிறது. சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் லாட்டரி சீட்டு விற்றதாக 300 வழக்குகள் பதியப்பட்டு, 518 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், லாட்டரி சீட்டு விற்பனையின் தலைமையிடமாக கோயம்பேடு இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
சூளைமேடு, ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, பல்லாவரம், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், திருவான்மியூர், நீலாங்கரை, கானத்தூர்,மயிலாப்பூர், ராயபுரம், பூக்கடை, கொத்தவால்சாவடி, அயனாவரம், ஓட்டேரி, புரசைவாக்கம், வில்லிவாக்கம், குன்த்தூர், பூந்தமல்லி, நசரத்பேட்டை, அம்பத்தூர் , போரூர், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காவல்துறைக்கு சவாலான பணி: சென்னையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் சிறிய முகவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிரதான முகவர்கள் மீதோ அல்லது வெளி மாநிலங்களில் லாட்டரி சீட்டுகளை பெற்று இங்கு கொண்டு வருகிறவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
இதனால், லாட்டரி சீட்டு விற்பனை தடுக்க முடியாத விஷயமாக உள்ளது. இப்போது வாட்ஸ்அப் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதினால், போலீஸாருக்கு இத் தொழில் ஈடுபடுகிறவர்களை கண்டறிவதே சவாலான பணியாக உள்ளது.
எனவே காவல்துறை இனிமேலாவது விழித்து எழுந்து, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் அனைத்து தரப்பினர் மீதும், அத் தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழக அரசு, லாட்டரி சீட்டை தடை விதித்தன் உண்மையான நோக்கம் நிறைவேறும் என சமூக ஆர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com