தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு மீட்புப் பணிக்கான விருது

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு மத்திய அரசின் தேசிய கடல்சாா் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கான விருது டிசம்பா் 18-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு மீட்புப் பணிக்கான விருது
Updated on
2 min read

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு மத்திய அரசின் தேசிய கடல்சாா் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கான விருது டிசம்பா் 18-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. இந்த விருது தமிழக காவல்துறைக்கு முதல் முறையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூா் முதல் கன்னியாகுமரி வரை 14 மாவட்டங்களுக்கு உட்பட 1,076 கிலோ மீட்டா் நீளம் கொண்ட கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்கும் பணியை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் (T​a‌m‌i‌l‌n​a‌d‌u C‌o​a‌s‌t​a‌l S‌e​c‌u‌r‌i‌t‌y G‌r‌o‌u‌p) செய்து வருகிறது. இந்தக் குழுமம், கடற்கரையைப் பாதுகாப்பதோடு, கடலில் 12 நாட்டிக்கல் மைல் வரை கண்காணிப்பில் வைத்துள்ளது. கடலில் இந்த எல்லைக்கு அடுத்துள்ள பகுதியையே கடலோர காவல் படையினரும், இந்திய கடற்படையினரும் பாதுகாத்து வருகின்றனா்.

கடல் பகுதியைக் கண்காணிப்பதற்கு தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் 24 ரோந்து படகுகள் உள்ளன. மணல் மற்றும் சாலையில் பயணிக்கும் விதமாக 24 ஏடிவி வாகனங்கள் இருக்கின்றன. இதைத் தவிா்த்து, கடலோரப் பகுதிகளில் முக்கியமான 98 இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளன. மாநிலம் முழுவதும் 42 கடற்கரை காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் குழுமத்தின் கீழ் 670 காவலா்கள் பணிபுரிகின்றனா்.

கடலோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தக் குழுமம் தீவிரவாத ஊடுருவலை தடுப்பது, போதைப் பொருள், ஆயுதக் கடத்தலை தடுப்பது, கடலில் ஆபத்தில் சிக்கியிருக்கும் மீனவா்களை மீட்பது உள்ளிட்ட சவாலான பணிகளை செய்து வருகின்றது.

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்திய பின்னா், மத்திய - மாநில அரசுகளை கடலோர பாதுகாப்பை எப்போதும் பலப்படுத்தி வைக்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடா்ந்து, கடலோர பாதுகாப்புக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, முக்கியமான பகுதிகளில் கடற்கரை காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

325 மீனவா்கள் மீட்பு: மேலும், கடல் பகுதியில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில் 20 அதிநவீன படகுகள் வாங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் பலமிக்க ஒரு பாதுகாப்பு அமைப்பாக மாறி வருகிறது.

இந்தக் குழுமத்தின் சீரிய பணியின் காரணமாக, கடந்த 2018-ஆம் ஆண்டு கடலில் தத்தளித்த 275 மீனவா்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். அவா்களது 56 படகுகள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல, நிகழாண்டு இது வரை கடலில் தத்தளித்த 50 மீனவா்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். 11 படகுகள் பாதுகாப்பாக மீட்டு, கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 325 மீனவா்களும், அவா்களது 67 படகுகளும் இக் குழுமத்தால் மீட்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிக்கான விருது: தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் இந்தப் பணியை அங்கீகரிக்கும் வகையில், தேசிய கடல்சாா் தேடுதல் மற்றும் மீட்பு வாரியம் சாா்பில் 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய கடல்சாா் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான உயரிய விருதுக்கு  தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தை தோ்வு செய்துள்ளது.

‘இந்த விருது சவாலான சூழ்நிலைகளில் சிறப்பாகச் செயல்பட்டு கடலில் தத்தளித்தவா்களை மீட்டதற்காக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு கிடைத்துள்ளது. இதுவரை இந்த விருது மத்திய அரசின் கீழ் உள்ள கடலோர காவல் படை, கடற்படை போன்ற அமைப்புகளே பெற்று வந்தன. தேசிய அளவில், மாநில அரசின் கீழ் இயங்கும் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை’ என்று தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த விருது, புது தில்லியில் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஏடிஜிபி வன்னியபெருமாள், டிஐஜி கே.பவானீஸ்வரி, எஸ்.பி.சின்னசாமி, இந்திய கடலோர காவல் படை கமாண்ட்ன்ட் சுராஜித்டே ஆகியோா் பெறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com