ஒரே கட்டுப்பாட்டு அறையின் கீழ் 2.55 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்!: சென்னை காவல்துறையில் விரைவில் அறிமுகம்

சென்னை முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 2.55 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் ஒரே குடையின் கீழே கொண்டு வருவதற்காக தலைமை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளதாக, காவல்துறையினர்
ஒரே கட்டுப்பாட்டு அறையின் கீழ் 2.55 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்!: சென்னை காவல்துறையில் விரைவில் அறிமுகம்
Updated on
3 min read

சென்னை முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 2.55 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் ஒரே குடையின் கீழே கொண்டு வருவதற்காக தலைமை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை பெருநகரில் தங்கச் சங்கிலி பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற அதிகரித்து வரும் குற்றங்களை தடுப்பது என்பது சாதாரண செயல் இல்லை.  இதைத் தடுக்க, நீண்ட திட்டமிடல், தொலைநோக்குப் பார்வை, தொழில்நுட்பம் சார்ந்த அறிவு, பொதுமக்கள் ஆதரவு ஆகியவற்றுடன் அணுகினால் மட்டும் சாத்தியப்படுத்த முடியும் என்பதை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் நன்கு உணர்ந்திருக்கிறார்.
 அதன் பயனாக, வளர்ந்த நாடுகளில் உள்ள லண்டன், பாரீஸ், நியூயார்க் உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ளது போல, சென்னை முழுவதையும் கண்காணிப்பு கேமராவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டன. இதற்கான நிதியும், தொழில்நுட்ப வசதியும் போதுமான அளவுக்கு காவல்துறையிடம் இல்லாத நிலையில், அதை பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் உதவியுடன் சாத்தியமாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன.
விழிப்புணர்வு பிரசாரம்:  கண்காணிப்பு கேமரா குறித்து பொதுமக்களிடம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் சென்னை காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம் செய்தது. மேலும் நடிகர்கள் விவேக், விக்ரம், விஜய் சேதுபதி, செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் "மூன்றாவது கண்' என்ற பெயரில் பங்கேற்று நடித்த 4 விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டன.
இதனால் எதிர்பார்த்தபடி, பொதுமக்களிடமிருந்து கண்காணிப்பு கேமரா பொருத்துவற்கான ஆதரவு பெருமளவு கிடைத்தது. இதன் முதல் கட்டமாக யானைக்கவுனி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதி முழுமையான கண்காணிப்பு கேமராவுக்குள் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து தியாகராயர் நகர், அண்ணாநகர், பூக்கடை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வேப்பேரி என அடுத்தடுத்து நகரின் பெரும்பாலான பகுதிகள் "மூன்றாவது கண்' பார்வைக்குள் கொண்டு வரப்பட்டன.
2.55 லட்சம் கேமராக்கள்: இதையடுத்து 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்ற இலக்குடன் காவல்துறையினர் செயல்படத் தொடங்கினர். எந்தப் பகுதியும் விடுபடாமல், மிகவும் கவனமாக அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டன. இத்தகைய நடவடிக்கையால், நகரில் இப்போது 2.55 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கின்றன.
இத்தகைய தீவிர தொடர் நடவடிக்கை காரணமாக, நகரின் பல இடங்களில் இப்போது 30 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 
கண்காணிப்பு கேமராவினால் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் விரைந்து கைது செய்யப்படுவதோடு, குற்றங்களும் ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்படுகின்றன. மேலும், சென்னையில் கடந்த காலங்களில் நடைபெற்ற குற்றங்களை விட, தற்போது பெருமளவு குறைந்திருப்பதாக பெருநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைந்த குற்றங்கள்: கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற குற்றங்களை, நிகழாண்டு அதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது, பெருமளவு குற்றங்கள் குறைந்திருப்பதைக் காண முடிகிறது.  முன்பு வழக்குகளில் துப்பு துலக்க கைரேகைகளையும், தடயங்களையும் தேடிய காவல்துறைக்கு, இப்போது கண்காணிப்பு கேமரா மட்டும் போதமானதாக உள்ளது.
குற்றவாளிகளிடம் அச்ச உணர்வு: இக் காரணத்தால் குற்ற வழக்குகளின் விசாரணையில் காவல்துறையின் அணுகுமுறையே மாறிவிட்டதாக காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணையின்போது காவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையும், மன அழுத்தமும் குறைந்திருப்பதாகவும் கூறுகிறார்.
 நாட்டிலேயே அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் உள்ள முதல் நகரமாக சென்னை உருவாகியுள்ள நிலையில், அதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குற்றச் செயலில் ஈடுபட்டால் கண்காணிப்பு கேமராக்களிடமிருந்து தப்ப முடியாது என்ற அச்ச உணர்வு சமூக விரோதிகளிடம் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமை கட்டுப்பாட்டு அறை:  சென்னை இப்போது "மூன்றாவது கண்களின்' கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அடுத்த கட்டமாக குற்றவாளிகள் நடமாட்டத்தையும், சமூக விரோதிகள் அசைவுகளையும் எளிதில் அறியும் வகையில் முக அடையாளங்களை கண்டு எச்சரிக்கும் வகை கேமராக்கள், வாகன எண்களை கண்டு எச்சரிக்கும் கேமராக்கள் ஆகியவற்றை முக்கியமான இடங்களில் பொருத்துவதற்குரிய நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இப்போது நகரின் நுழைவாயில்களாக இருக்கும் பெருங்களத்தூர், மாதவரம், பூந்தமல்லி, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், தியாகராயர் நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், எழும்பூர், மீனம்பாக்கம், தாம்பரம், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த இரு வகை கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக, நகரில் பொருத்தப்பட்டுள்ள 2.55 லட்சம் கேமராக்களை  ஒரே குடையின் கொண்டு வரும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட தலைமை கட்டுப்பாட்டு அறையை அமைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர். ஏனெனில் இப்போது ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு தனித்தனியாக கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. இதனால் தகவல்களை ஒருங்கிணைப்பதிலும், தகவல்களை பரிமாறிக் கொள்வதிலும் அவ்வப்போது இடர்பாடு ஏற்படுகிறது.
இக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்ட பின்னர், அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. மேலும், நகருக்குள் எத்தகைய குற்றச் செயலில் யார் ஈடுபட்டாலும் சில நிமிஷங்களில் அடையாளம் காணப்பட்டு, சில மணி நேரங்களில் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

கண்காணிப்பு கேமராவும்... குற்றங்களும்...


                     2018          2019                எத்தனை
                     (ஜனவரி -  ஏப்ரல்)     சதவீதம் 
                                                                குறைவு                                                         

தங்கச் சங்கிலி பறிப்பு           159      82          48
கொள்ளை                                    278     211         24  
பொதுமக்களிடம்
தகராறு செய்தல்                  16,306     14,457         11  
அடிதடி சம்பவங்கள்                727          645         11
ஆயுதங்களுடன்
மோதிய சம்பவங்கள்                19             11         42
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com