ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: அனுமதியின்றி செல்லிடப்பேசி கோபுரம் அமைத்த 3 நிறுவனங்கள் மீது வழக்கு
By DIN | Published On : 01st April 2019 04:26 AM | Last Updated : 01st April 2019 04:26 AM | அ+அ அ- |

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி, அனுமதியின்றி செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைத்த 3 தனியார் நிறுவனங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியை காண ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு களித்தனர். இதையொட்டி செல்லிடப்பேசி சேவை பாதிக்காமல் இருப்பதற்காக, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் பகுதியில் 3 தற்காலிக செல்லிடப்பேசி கோபுரங்களை சில நிறுவனங்கள் அமைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த செல்லிடப்பேசி கோபுரங்களை வைக்க மூன்று தனியார் நிறுவனங்களும் அனுமதி பெறவில்லையாம். இது குறித்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா சதுக்கம் போலீஸார், தற்காலிக செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைத்த தனியார் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.