ஓய்வு பெற்ற ராணுவ வீரரை ஏமாற்றி ஏடிஎம் அட்டையில் இருந்து பணம் திருட்டு
By DIN | Published On : 01st April 2019 04:23 AM | Last Updated : 01st April 2019 04:23 AM | அ+அ அ- |

சென்னையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரை ஏமாற்றி ஏடிஎம் கார்டில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சாலிகிராமம் காவேரி தெருவைச் சேர்ந்தவர் ந.செல்வராஜ் (75). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், சாலிகிராமம் அருணாச்சலம் தெருவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் சனிக்கிழமை பணம் எடுக்கச் சென்றார். அங்கு இருந்த ஒரு இளைஞரிடம் செல்வராஜ், தனது ஏடிஎம் அட்டையைக் கொடுத்து பணம் எடுத்து தரும்படி உதவிக் கேட்டாராம்.
உடனே அந்த இளைஞர், அவரது அட்டை வாங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் செலுத்துவதுபோல நாடகமாடினாராம். இதில் சிறிது நேரத்தில் அந்த இளைஞர், இந்த அட்டையில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை என செல்வராஜியிடம் ஏடிஎம் அட்டையைத் திரும்ப ஒப்படைத்தவிட்டு சென்றுவிட்டாராம்.
இதையடுத்து அங்கிருந்து வீட்டுக்கு வந்த செல்வராஜ், தனது செல்லிடப்பேசியை பார்த்துள்ளார். அப்போது அவரது ஏடிஎம் அட்டையின் மூலம் ரூ.86 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் அட்டை மூலம் பணத்தைத் திருடிய இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொபெட்டில் பணம் திருட்டு: ராயப்பேட்டை பாரதி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ம.முத்துக்குமார் (32). அச்சகம் நடத்தி வரும் இவர், சனிக்கிழமை ஒரு வங்கியில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுத்து, தனது மொபெட் இருக்கையின் கீழே உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவுக்குச் சென்றார்.
அந்தத் தெருவில் மொபெட்டை நிறுத்திவிட்டு, அங்குள்ள தனது நண்பரைச் சந்தித்துவிட்டு முத்துக்குமார் மீண்டும் திரும்பி வந்தார். அப்போது மொபெட்டின் பெட்டியை உடைத்து, அதில் இருந்த ரூ.70 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை பார்த்து முத்துக்குமார் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.