சென்னை புறநகர்ப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு
By DIN | Published On : 01st April 2019 04:32 AM | Last Updated : 01st April 2019 04:32 AM | அ+அ அ- |

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீரை விநியோகிப்பதில் குடிநீர் வாரியத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை நிலத்தடி நீர்மட்டம் மிகவும் வேகமாக குறைந்து வருகிறது. மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், தியாகராயநகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சென்ற ஆண்டு 150 முதல் 200 அடியில் இருந்த நிலத்தடி நீர் இந்த ஆண்டு 400 அடி ஆழத்துக்குச் சென்றுள்ளது. குறிப்பாக சென்னையின் தெற்கு புறநகர் பகுதியில் நிலத்தடி நீர் 700 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.
கிண்டி, ஆலந்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் பகுதியில் நிலத்தடி நீர்படுகை பாறை போன்று இருப்பதால் பொதுமக்களுக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் மத்திய சென்னையில் உள்ள வண்டல் மண்ணாலான நீர்த்தேக்கங்களும் தற்போது வறண்டுள்ளன.
அதேபோன்று வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், போரூர், மயிலாப்பூர் போன்ற இடங்களில் இருக்கும் நீர்த்தேக்கங்களிலும் மிகவும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. தனி வீடு வைத்திருக்கும் நபர்கள் தண்ணீருக்காக மேலும் ஆழப்படுத்துவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உப்புத்தன்மை அதிகமாகிறது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து நீர்வள நிபுணர்கள் கூறியதாவது: சென்னை புறநகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விவசாயக் கிணறுகள் உள்ளன. இதில், நீர்மட்டம் அதிகரிக்க அருகில் உள்ள ஏரி, குளங்கள்தான் காரணம். விவசாயக் கிணறுகளில், சட்டத்துக்குப் புறம்பாக, அதிக திறன் கொண்ட மோட்டார் "கிராஸ் போர்' அமைத்து, அதிகளவு நீர் உறிஞ்சப்படுகிறது. நில உரிமையாளர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக, நீர் உறிஞ்சும் தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொரு கிணற்றில் இருந்தும், 9, 12, 24, 36 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில், தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. நாளொன்றுக்கு, ஒவ்வொரு லாரியும், 10 - 20 நடை வரை சென்று தண்ணீர் நிரப்புகின்றன. இந்த வகையில், தினசரி, ஒரு கிணற்றில் 11 லட்சம் லிட்டருக்கு மேல் நீர் உறிஞ்சப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லாரி தண்ணீர் தற்போது ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை விற்கப்படுகிறது.
புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாத்து மழைநீர் சேகரிப்பை அதிகரிக்க வேண்டும். விவசாய கிணறுகளில் தனியார் கட்டுப்பாடு இல்லாமல் நீர் உறிஞ்சுவதற்குத் தடை விதிக்க வேண்டும். புறநகர் பகுதியில், 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள், முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளன. ஒவ்வொரு மாதமும், நிலத்தடி நீர் மட்டத்தை அளவீடு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும் பணியும், முறையாக நடைபெறவேண்டும். "நீர் திருட்டுக்கு, திருட்டு வழக்கு பதிய வேண்டும்' என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். மேலும் சென்னை நகருக்குள் பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை பாதுகாப்பதுடன், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறைப்படுத்தினாலே தண்ணீர் பஞ்சத்தைத் தவிர்க்கலாம் என்றனர்.