கனிமொழியை தகுதியிழப்பு செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி
By DIN | Published On : 17th April 2019 02:15 AM | Last Updated : 17th April 2019 02:15 AM | அ+அ அ- |

திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர்ஆனந்த் ஆகியோரை தகுதியிழப்பு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்லாசேட் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்காக அவரது கட்சியினர் வாக்காளர்களுக்கு நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர்.மேலும், இந்தத் தொகுதியில் ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக கனிமொழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதே போல, வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு ஏராளமாக பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. கதிர்ஆனந்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்ட சோதனையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கனிமொழி மற்றும் கதிர்ஆனந்தை தகுதியிழப்பு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில், பணப் பட்டுவாடா தொடர்பாக கனிமொழி, கதிர்ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...