நீட் தேர்வு: ஹால் டிக்கெட்டில் தேதி மாறியதால் குழப்பம்
By DIN | Published On : 17th April 2019 02:24 AM | Last Updated : 17th April 2019 02:24 AM | அ+அ அ- |

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுகளில் தேதி மாறி குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
இதையடுத்து, அந்தத் தகவல்கள் திருத்தப்பட்டு இணையதளத்தில் சரியான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் அந்தத் தேர்வில் பங்கேற்பதற்கு நாடு முழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் கடந்த திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் பாதுகாப்பு குறியீடு கொடுத்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தனர். ஆனால், ஹால்டிக்கெட்டில் தேர்வு தேதி 05.05.2019 என்பதற்குப் பதிலாக, 15.04.2019 என இருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த தவறு சரிசெய்யப்பட்டு சரியான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து மாணவர்களிடம் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது.
தமிழகத்தின் 14 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு தேசிய தேர்வுகள் முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...