பறிமுதல் தங்கம் ஆயிரம் கிலோவைத் தாண்டியது
By DIN | Published On : 17th April 2019 02:22 AM | Last Updated : 17th April 2019 02:22 AM | அ+அ அ- |

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு ஆயிரம் கிலோவைத் தாண்டியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்திலுள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குச்சாவடி சீட்டு வழங்கப்பட்டு விடும். தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைப்படுத்திய காலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், ஆபரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை ரூ.135.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. திங்கள்கிழமை மட்டும் ரூ.2.50 கோடி பறிமுதல் ஆனது. அதில் அதிகபட்சமாக கோவையில் ரூ.1.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட வகையில், இதுவரை 1,022 கிலோ தங்கமும், 645 கிலோ வெள்ளியும் பறிமுதல் ஆகியுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.294.38 கோடியாகும்.
பரிசோதிக்க...: வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கும். அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படும். வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அது நடத்திக் காட்டப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களின் தன்மையைப் பரிசோதிக்கவே இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். இடைத்தேர்தல் இணைந்து நடைபெறும் தொகுதிகளில் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றார் சத்யபிரத சாகு.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...