நான்காவது மாடியில் இருந்து விழுந்த இளைஞருக்கு உயர் சிகிச்சை மூலம் மறுவாழ்வு

நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உடலின் பல்வேறு பாகங்கள் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உயர் சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
Published on
Updated on
1 min read

நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உடலின் பல்வேறு பாகங்கள் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உயர் சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டது. தற்போது தாமாகவே எழுந்து நடக்கும் அளவுக்கு அவர் குணமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியது: மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சேர்ந்தவர் தீப் சுரேஷ். சென்னையில் தங்கியிருந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டின் நான்காம் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.
ஏறத்தாழ 40 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் அவருக்கு இரு பக்க விலா எழும்புகளும் உடைந்தன. அதுமட்டுமன்றி, அவர் உடலில் இருந்து பெருமளவு ரத்தம் வெளியேறியது.
இதையடுத்து, மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது தீப் சுரேஷின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. உடல் உறுப்புகள் அனைத்தின் செயல்பாடுகளும் மோசமாக இருந்தன. இதுபோன்ற  ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். இருப்பினும்,  மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர முதலுதவி செய்து அவரது உயிரைக் காப்பாற்றினர். 
இருந்தபோதிலும், அதைத் தொடர்ந்து பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. மியாட் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், உயர் மருத்துவத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தீப் சுரேஷுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 
அதன் பின்னர், அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தற்போது சுரேஷ் பூரண குணமடைந்துள்ளார். இதுகுறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறுகையில், தீப் சுரேஷைப் போன்று மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவது கடினம். இருந்த போதிலும், எங்களது தொடர் முயற்சியின் காரணமாக அதனை சாத்தியமாக்கியுள்ளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com