சமூக வலைதளங்கள் மூலம் அதிகரிக்கும் குற்றங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சமூக வலைதளங்கள் மூலம் அதிகரிக்கும் இணையதள குற்றங்களைத் தடுக்க, சமூக வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வரும் மே 20-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதிக்குள் ஆலோசனை
சமூக வலைதளங்கள் மூலம் அதிகரிக்கும் குற்றங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சமூக வலைதளங்கள் மூலம் அதிகரிக்கும் இணையதள குற்றங்களைத் தடுக்க, சமூக வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வரும் மே 20-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதிக்குள் ஆலோசனை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்டனி கிளமென்ட் ரூபன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தற்காலத்தில் தனிநபர்களுக்கு எதிரான தாக்குதல்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல், மின்னஞ்சல், யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் அதனை பயன்படுத்தும் நபர்களின் ஆதார் அட்டை எண்ணை கண்டிப்பாக இணைக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "பாலியல் சம்பவம் தொடர்பான விடியோக்கள், பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான ஆடியோ என பெரும்பாலான இடங்களில் பிரச்னைகளுக்கு,  சமூக வலைதளங்கள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. 
எனவே, சமூக வலைதள நிறுவனங்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்' என கருத்து தெரிவித்து, இந்த வழக்கில் வாட்ஸ்ஆப், கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களை எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் மனோகர், "சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு சமூக வலைதள நிறுவனங்கள் போலீஸாருக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இதனால் ஏற்படும் காலதாமதம் குற்றவாளிகளுக்கு சாதகமாகி விடுகிறது' என குற்றம்சாட்டினார். 
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் அரவிந்த் தத்தார், கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், ஃபேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சதீஷ் பராசரன் உள்ளிட்ட பலர் ஆஜராகி, சமூக வலைதளங்கள் எந்தவொரு ஆவணங்களையும் சேமித்து வைப்பது இல்லை. 
அதே நேரம் தனிநபர் ரகசியங்களையும் வெளியிடுவதில்லை. எனவே தான் சமூக வலைதளங்கள் உலக அளவில் பிரபலமாகி உள்ளன. மேலும், புலன் விசாரணை அமைப்புகளுக்கு போதுமான ஒத்துழைப்பை சமூக வலைதள நிறுவனங்கள் கொடுத்து வருவதாக, வாதிட்டனர். 
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "சமூக வலைதளங்களின் மூலம் அதிகரித்து வரும் இணையதள குற்றங்களைத் தடுக்க ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், கூகுள், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வரும் மே மாதம் 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதிக்குள் ஆலோசனை நடத்த வேண்டும். அந்த ஆலோசனை தொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சமூகவலைதள நிறுவனங்களும் தங்களது பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com