"மகாத்மாவாக காந்தி மாற உறுதுணையாக இருந்தவர் கஸ்தூர்பா'
By DIN | Published On : 26th April 2019 04:42 AM | Last Updated : 26th April 2019 04:42 AM | அ+அ அ- |

"காந்தி, நமது நாட்டின் மகாத்மாவாக மாற உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி கஸ்தூர்பா' என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.
சென்னை தக்கர் பாபா வித்யாலயா சமிதி சார்பில் கஸ்தூர்பாவின் 150-ஆம் ஆண்டு பிறந்த தின கொண்டாட்டத்தின் நிறைவு விழா தியாகராயர் நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு அதன் தலைவர் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார்.
இதில், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது: மகாத்மா காந்தி நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர். ஒரு நொடியைக் கூட வீணாக செலவழிக்க மாட்டார். இதை இன்றைய இளைய சமுதாயத்தினர் கடைப்பிடிக்க வேண்டும். காந்தியின் துணைவியார் கஸ்தூர்பா தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் காந்தியுடன் பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார்.
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கஸ்தூர்பா, சிறையில் இருக்கும்போது, படித்த பெண்கள் மூலம் படிக்காத பெண்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
தனது வாழ்நாள் முழுவதும் நேர்மை, உறுதி, இறை நம்பிக்கை ஆகிய மூன்றையும் கடைப்பிடித்தார். இளமைக் காலத்தில் இருந்து தனது சுக, துக்கங்களை மறந்த கஸ்தூர்பா, நாட்டின் மகாத்மாவாக காந்தி மாறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் என்றார்.
இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், ஆர்.பிச்சை, ஒருங்கிணைப்பாளர் கே.உஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.