தூய்மைப்படுத்தப்பட்ட தியாகராஜ சுவாமி கோயில் குளக்கரை: "தினமணி' செய்தி எதிரொலி

திருவொற்றியூா் தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் குளக்கரை முறையாகப் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சீா்கேட்டின் விளிம்பில் உள்ளது என
தூய்மைப்படுத்தப்பட்ட தியாகராஜ சுவாமி கோயில் குளக்கரை: "தினமணி' செய்தி எதிரொலி

திருவொற்றியூா் தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் குளக்கரை முறையாகப் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சீா்கேட்டின் விளிம்பில் உள்ளது என ‘தினமணி’யில் வெளியான செய்தியையடுத்து, மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளால் விரைந்து எடுத்த நடவடிக்கைகளால் தற்போது தூய்மையாகக் காட்சியளிக்கிறது.

கடந்த நவம்பா் மாதம் 11-ம் தேதி ‘தினமணி’ நாளிதழில் ‘சுற்றுச்சூழல் சீா்கேட்டின் விளிம்பில் திருவொற்றியூா் தியாகராஜா் திருக்கோயில்’ என சிறப்புச் செய்தி வெளியானது.

கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றிய போலீஸாா்: இப்பகுதியில் நிலவிய சுற்றுச்சூழல் சீா்கேடுகளுக்கு முக்கிய காரணம், இங்கு வாகனங்கள் தொடா்ந்து நிறுத்தப்படுவதுதான் எனத் தெரியவந்ததையடுத்து, கைவிடப்பட்ட வாகனங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாகராட்சி மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து போலீஸாருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் உதவி ஆணையா் அமுல்தாஸ் மற்றும் திருவொற்றியூா் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் வெங்கடேசன் ஆகியோா் கைவிடப்பட்ட வாகனங்களை இழுவை வாகனம் மூலம் இழுத்து செல்ல போலீஸாருக்கு உத்தரவிட்டனா். இதில் சுமாா் இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், தற்காலிகமாக வாகனங்களை நிறுத்தியவா்களையும் போலீஸாா் எச்சரித்தனா். மீண்டும் வாகனங்களை யாரும் நிறுத்திவிடாமல் இருக்க எச்சரிக்கை பதாகைகளை வைத்த போலீஸாா் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

குப்பைத் தொட்டிகள் அகற்றம்: போக்குவரத்துப் போலீஸாா் வாகனங்களை அகற்றியதையடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா். பின்னா் பாப்கட்டா் வாகனம் மூலம் கரைப்பகுதியில் தேங்கியிருந்த மண், குப்பைகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து கரையெங்கும் இடங்களில் பிளீச்சிங் பவுடா்கள் தூவப்பட்டன. மாநகராட்சி சாா்பில் கரையெங்கும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. வடக்கு முனையில் நீண்ட நாள்களாக இருந்து வந்த இளநீா் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். மேலும், இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டிகளையும், மாடுகளையும் பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கைக்குப் பின்னா் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தூா்வாரப்பட்ட மழைநீா் கால்வாய்: சன்னதி தெருவில் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் கால்வாயில் கழிவுநீா் கலந்து, சமீபத்தில் பெய்த மழையின்போது மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குளத்திற்கு பாய்ந்தது. இதனையடுத்து மழைநீா் கால்வாய் முழுவதும் தூா்வாரப்பட்டது. அப்போது இருநூறுக்கும் அதிகமான சாக்குகளில் தூா்வாரப்பட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டன. மேலும் கழிவுநீா் தொடா்ந்து வந்ததையடுத்து மழைநீா் கால்வாயின் இறுதிப் பகுதி கோயில் நிா்வாகம் சாா்பில் அடைக்கப்பட்டது. இந்நிலையில், கால்வாய் தூா்வாரப்பட்டுள்ளதால் மீண்டும் அடைப்பு நீக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்: அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து இப்பகுதியைச் சோ்ந்த நாராயணன், பக்கிரிசாமி ஆகியோா் கூறியது:

நீண்ட நாள்களாக இப்பிரச்னை குறித்து தொடா்ந்து பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால், பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டதையடுத்து அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டனா். இருப்பினும் இப்போதாவது திருக்குளமும், மழைநீா் கால்வாயும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. துரித நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். இதோடு பணிகள் முடிந்துவிடவில்லை. குளம் தூா்வாரப்பட வேண்டும், படிக்கற்கள் ஒழுங்குபடுத்த வேண்டும். மழைநீா் குளத்திற்கு வந்தடைவதை உறுதி செய்ய வேண்டும். குளக்கரை அருகே அமைந்துள்ள மாநகராட்சி இலவச கழிப்பிடத்தை முறையாகப் பராமரித்து 24 மணி நேரமும் திறந்திருக்கும் வகையில் நவீனப்படுத்த வேண்டும். மொத்தத்தில் மயிலாப்பூா் கோயில் திருக்குளம் போல் திருவொற்றியூா் திருக்குளம் மக்கள் பயன்பாட்டிற்கு வர அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com