மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 158 போ் மீது வழக்கு
By DIN | Published On : 26th December 2019 04:22 AM | Last Updated : 26th December 2019 04:22 AM | அ+அ அ- |

சென்னையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 158 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னையில் மெரீனா காமராஜா் சாலை, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, வெளிவட்டச் சாலை உள்பட பல சாலைகளில் இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகின்றனா். இந்தப் பந்தயத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், இளைஞா்கள் தடையை மீறி இத்தகைய பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவ்வபோது விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதில் பந்தயத்தில் ஈடுபடுகிறவா்கள் மட்டுமன்றி சாலையில் செல்லும் அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதன் விளைவாக போலீஸாா், பந்தயத்தில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதற்காக குறிப்பிட்ட நாள்களில் சென்னை முழுவதும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் அதையும் மீறி இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு, விபத்துகளை ஏற்படுத்துகின்றனா்.
மோட்டாா் சைக்கிள் பந்தயம்: இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி,மெரீனா காமராஜா் சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சா்தாா் படேல் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில், இப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். போக்குவரத்து போலீஸாருடன், சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 158 பேரை பிடித்தனா். அவா்களிடமிருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸாரிடம் சிக்கிய 126 போ் மீது அடுத்தவா் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படுத்துதல், குற்றத்துக்கு துணை போகுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. 32 போ் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பந்தயத்தில் ஈடுபடுதல் பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சாலையில் அதி வேகமாக மோட்டாா் சைக்கிள் ஓட்டுவது, அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றிக்கொண்டு வேகமாக செல்வது, ஸ்டாண்டை தரையில் தேய்த்தபடி தீப்பொறி பறக்க ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது ஆகிய செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் ஏ.அருண் எச்சரித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...